ஜோடிப் பொருத்தத்தைப் பாராட்டும் படக்குழு

ஜோடிப் பொருத்தத்தைப் பாராட்டும் படக்குழு

1 mins read
7e3ad2ec-036c-4f2a-89f1-c2e81aaca0b7
-

நயன்தாரா, சிவகார்த்திகேயன் இணைந்து நடித்து அடுத்த மாதம் வெளியாக இருக்கும் படம் 'வேலைக்காரன்'. இந்தப் படத்தில் இவர்களின் ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என்கின்றது படக்குழு. நயன்தாரா எந்த வேடத்தில் நடித்தாலும் அதற்கேற்றாற்போல தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கக்கூடியவர். அதுபோல அவர் யாருடன் நடித்தாலும் ஜோடிப் பொருத்தத்தைப் பாராட்டாதவர்கள் யாரும் இல்லை எனலாம். அண்மையில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்த 'நானும் ரௌடிதான்' படத்தில் ஊமைப் பெண்ணாக நடித்திருந்தார். அப்போது அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே 'கெமிஸ்ட்ரி' பிரமாதமாக இருந்தது என்று பாராட்டியது திரையுலகம். அதுபோலவே தற்பொழுது சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கிறார். இவர்களின் ஜோடிப் பொருத்தம் சரியாக வருமா என்ற சந்தேகத்தை எழுப்பினர் திரையுலகினர்.

ஜெய்யுடன் நடித்தபோதும் இதுபோல்தான் சந்தேகம் எழுப்பினர். ஆனால் 'ராஜா ராணி' படமும் பெரிய அளவில் வெற்றிபெற்றது. அதுபோலத்தான் இந்தப் படமும் வெற்றிபெறும் என்கிறது படக்குழு. இந்தப் படத்தில், பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். நயன்தாராவின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போதும் அவரைப் பற்றிய காதல் அல்லது திருமணச் செய்திகள் வெளியாவது வழக்கம். அதுபோல் இவர் நடித்த 'வேலைக்காரன்' படம் வெளியாக உள்ள நிலையில் நயன்தாராவுக்கும் பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் நயன்தாராவோ, விக்னேஷ் சிவனோ இதுபற்றி வாய் திறக்காமல் மௌனமாக இருக்கின்றனர்.