விழாவில் மனக்குமுறலை வெளிக்காட்டிய இயக்குநர்

விழாவில் மனக்குமுறலை வெளிக்காட்டிய இயக்குநர்

2 mins read
99940a9e-f635-4a69-8e8c-2c05a571bcc4
-

கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள 'இப்படை வெல்லும்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட சூரி பேசும்போது இயக்குநரின் நடிப்பு ஆசையைப் பற்றியும் அவர் மற்றவர்களை வேலை வாங்கும் விதத்தைப் பற்றியும் பாராட்டுவதுபோல் கிண்டலடித்துப் பேசினார். அதன் பின்னர் பேச வந்த படத்தின் இயக்குநர் கௌரவ் நாராணயன், சூரிக்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு படத்தின் நாயகனான உதயநிதி ஸ்டாலினைப் பற்றி மறைமுகமாகத் தாக்கத் தொடங்கினார். அவர் பேசும்போது, "உதயநிதி ஸ்டாலின், சூரி கூட்டணியை முதன் முதலாக உருவாக்கியது நான்தான். அவர்களோடு இசையமைப்பாளர் இமானையும் இணைத்து இந்த மூவர் கூட்டணியை முதன்முதலாக உருவாக்கி இந்தப் படத்தை ஆரம்பித்தேன்.

"ஆனால், படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே உதயநிதி ஸ்டாலின் என்னிடம் வந்து 'சார் நாளை முதல் வேறு ஒரு படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளேன்,' என்றார். பிறகு உதயநிதி ஸ்டாலின், சூரி, இமான் கூட்டணியில் 'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் நடிக்கத் தொடங்கினார். அதன்பின் சில நாட்கள் கழித்து வந்து மீண்டும் 'நாளை முதல் வேறொரு படத்தில் நடிக்க உள்ளேன்' என்றார். மீண்டும் அதே கூட்டணியில் 'பொதுவாக எம்மனசு தங்கம்' படம் ஆரம்பமானது.

"இறுதியாக என்னுடைய படப்பிடிப்பிற்கு வந்தார். அப்போதும் எனது படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது மற்ற படங்களின் கதாபாத்திரப் பெயர்களை வைத்துக் கூப்பிட்டுப் பேசிக் கொண்டிருப்பார்கள். "ஒரு நாள் நான், தயாரிப்பாளரிடம் சென்று என்னுடைய படத்தின் படப்பிடிப்பை ஒரு மாதம் தள்ளி வைத்துவிடுகிறேன். அதற்குள் உதயநிதி அந்தப் படங்களை முடித்துவிட்டு வரட்டும் என்று சொல்லி படப்பிடிப்பை தள்ளி வைத்தேன். நான் முதலில் ஆரம்பித்து வைத்த உதயநிதி ஸ்டாலின், சூரி, இமான் கூட்டணி எனது படங்களுக்கு முன்பாகவே இரண்டு படங்களில் சேர்ந்து நடித்துவிட்டார்கள்," என்று தன்னுடைய மனக்குமுறலை அனைவர் முன்பும் கொட்டித் தீர்த்தார்.