சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாகத் தன் மீது குற்றம் சாட்டப்பட்டது முதல் கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம் அமலா பால். சிலர் தன்னை மையப்படுத்தி வேண்டுமென்றே சர்ச்சைகளைக் கிளப்புவதாகக் கருதுகிறாராம். தனது மனக் குமுறல்களை நெருக்கமான சிலரிடம் பகிர்ந்து கொள்ள, அவர் மனதில் நினைத்த அனைத்தையுமே வெளிப்படுத்தும் விதமாக ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதை அமலா பாலும் தைரியமாக வெளியிட, திரையுலகப் பிரமுகர்கள் பலரும் அவரைத் தொடர்புகொண்டு, தைரியமாகச் செயல்பட்டிருப்பதாகவும் அவரது கருத்துகளை ஏற்பதாகவும் கூறி உள்ளனராம்.
"வருங்காலத்தில் நாம் அனைவரும் மலையாளி, தமிழர், பஞ்சாபி, குஜராத்தி என்கின்ற பாகுபாடுகளைக் களைந்து, ஓர் இந்தியராக நாட்டின் இறையாண்மைக்கும் வளர்ச்சிக் கும் பலம் சேர்க்கிற வகையில் வலம் வருவோம் என உண்மையாக, உறுதியாக நம்புகிறேன்," என தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அமலா பால். அது மட்டுமல்ல, வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரி கட்டும் தமக்கு நாட்டின் எந்த மாநிலத்திலும் சொத்து வாங்கும் உரிமை உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் இந்தியர்களுக்கு, ஒருசிலர் குறுகிய நோக்கில் சின்னச் சின்ன ஆதாயங்களுக்காக தொல்லை கொடுப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய போக்கைத் தவிர்த்து, அனைவரும் நாடு எதிர்நோக்கியுள்ள வறுமை, ஊழல், கல்வியறிவின்மை, அநீதி, போன்ற சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய போராட வேண்டும் என்றும் அதுவே சிறந்த போராட்டம் என்றும் கூறியுள்ளார்.

