விஜயகாந்தின் வாரிசு சண்முக பாண்டியன் அறிமுகமான 'சகாப்தம்' படம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆனால் 'மதுர வீரன்' மூலம் தனது முதல் படத்தினால் ஏற்பட்ட சந்தேகத்தையும் வருத்தத்தையும் போக்குவார் என நம்புவதற்கு வாய்ப்பு உருவாகி உள்ளது. 'மதுர வீரன்' படத்தின் முதல் தோற்ற சுவரொட்டி, பாடல்கள், முன்னோட்டக் காட்சிகள் என அனைத்துமே இது வெற்றிப்படம் என்பதற்கான அறிகுறிகளை வெளிப் படுத்தி உள்ளன. சென்னையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சண்முக பாண்டியனின் தாயார் பிரேமலதா விஜயகாந்த், "காலஞ்சென்ற எம்ஜிஆர் நடித்த படத்தின் தலைப்பிலேயே தனது மகனும் நடிப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது," என்றார்.
"இந்தப் படத்தின் கதையை இயக்குநர் முத்தையாவிடம் நான்தான் முதலில் கேட்டேன். கதை மிகவும் பிடித்திருந்தது. அதுகுறித்து கேப்ட னிடம் கூறியதும் அவரும் கேட்க வேண்டும் என விரும்பினார். "அதற்குக் காரணம் இது ஜல்லிகட்டை மையப்படுத்தும் கதை. இந்தக் காலத்து இளையர்கள் ஜல்லிக் கட்டுக்காகத்தான் முதன்முறையாக ஒன்றாகக் களமிறங்கிப் போராடினார்கள். அதனால் இந்த கதை கண்டிப்பாக வெற்றி பெறும்," என்றார் பிரேமலதா.

