எந்த விஷயத்திலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்கக்கூடியவர் நடிகை வரலட்சுமி. பெண்களுக்காக ஓர் அமைப்பைத் தொடங்கி அதை வழிநடத்தி வருகிறார். தற்போது 'காதல் மன்னன்' என்ற படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார் வரலட்சுமி. கதைப்படி, இவருக்கு காவல்துறை துணைக் கண்காணிப்பாளரின் மகள் வேடம். இவரது தந்தையாக சந்திரமௌலி நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்துடன் தொடர்புடைய புகைப்படம் ஒன்றை தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வரலட்சுமி. அதில் அவர், நாயகன் விமல், இயக்குநர் ஆகியோர் நாற்காலியில் அமர்ந்திருக்க, மூவருக்கும் நடுவே உள்ள மேசை மீது மதுப்புட்டி ஒன்று காணப்படுகிறது. "இதைக் குடிக்கலாமா? வேண்டாமா? டாஸ்மாக் முடிவெடுக்கும் நேரம் இது," என்று படத்தின் கீழே குறிப்பிட்டுள்ளார் வரலட்சுமி. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியாவிட்டாலும் இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

