நடிகை பார்வதி மேனன் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக கருத்து பதிவிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநிலப் போலிசார் தெரிவித்துள்ளனர். அண்மையில் திருவனந்த புரத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட பார்வதி, மம்முட்டி நடித்துள்ள 'காஸபா' என்ற மலையாளப் படம் குறித்து தன் கருத்தை வெளியிட்டார். இதனால் மம்முட்டி ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து பார்வதிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் மம்முட்டி ரசிகர்கள் உள்ளிட்ட பலர் ஆவேச மாக கருத்துகளைப் பதிவிட்டனர்.
பார்வதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகைகள் ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகள் பதிவிடப்பட்டன. இந்நிலையில் தனக்கு பாலியல் ரீதியில் சிலர் மிரட்டல் விடுப்பதாக பார்வதி புகார் எழுப்பி உள்ளார். இதுகுறித்து கேரள மாநில காவல்துறை அதிகாரியிடம் அவர் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து பார்வதிக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

