"எனது தாயார் சூர்யாவின் தந்தை சிவகுமாருடன் மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளார். சிறு வயதில் படப்பிடிப்புக்குச் செல்லும்போது அங்கு நடப்பவற்றைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கும். அப்போது சிவகுமார் சாரின் மகன் சூர்யாவுக்கு ஜோடியாக நானும் ஒரு நாள் நடிப்பேன் என்று கூறியது நினைவில் உள்ளது. "அன்று நான் ஆசைப்பட்டது தற்போது நிறைவேறியதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. சூர்யாவுடன் மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்," என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
'தானா சேர்ந்த கூட்டம்' படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தில் முதன்முறையாக ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளாராம் கீர்த்தி. படத்தில் இவரது கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாதாம்.
"இதில் எனக்கென நகைச்சுவைக் காட்சிகள் உள்ளன. நகைச்சுவையான, அதே சமயம் ஆச்சரியம் ஏற்படுத்தக் கூடிய கதாபாத்திரத்தை எனக்காக உருவாக்கி உள்ளார் விக்னேஷ் சிவன். அவர் இப்படத்தின் கதையை மேலோட்டமாக விவரித்த போதே கதையும் எனக்கான கதாபாத்திரமும் ரொம்பப் பிடித்துப் போனது.
"படப்பிடிப்புத் தளத்தில் வைத்துதான் விக்னேஷ் சிவன் வசனங்களையும் காட்சியையும் விவரிப்பார். அந்த இடத்திலேயே வசனங்களை சற்றே மெருகேற்றி நடிப்போம். இதனால் ஒவ்வொரு காட்சியும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்துள்ளது."
சூர்யா குறித்து?
"மிகவும் அமைதியானவர். அதிகம் பேச மாட்டார். அதே சமயம் நமக்கு ஏதேனும் சந்தேகம் என்று அணுகினால் நல்ல விளக்கங்கள் அளித்து உதவி செய்வார். பள்ளிப் பருவத்திலேயே நான் அவரது ரசிகை. "அதே போல் நடிகர் செந்திலுடன் நடித்ததும் நல்ல அனுபவம். அவர் கரடி பொம்மைப் போல் இனிமையான மனிதர். ரம்யா கிருஷ்ணன் என் அம்மாவின் தோழி. எனக்கு அவரை சிறு வயதில் இருந்தே தெரியும். 'பாகுபலி' வெளியான நேரத்தில் அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி.

