ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'டிக் டிக் டிக்'. 'நாணயம்', 'நாய்கள் ஜாக்கிரதை', 'மிருதன்' படங்களை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்துகொண்டு ஜெயம் ரவி பேசியபோது, "முதன் முதலில் 'ஸ்பேஸ் திரில்லர்' படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்தின் அரங்கத்தைப் பார்த்ததும் இதில் நடிக்கும் ஆவல் அதிகமானது. அரங்கம் உண்மையான விண்வெளி ஆய்வகத்தைப் போலவே இருந்தது.
"இந்தப் படத்தின் மூலம் என்னுடைய மகன் ஆரவ் அறிமுகமாகியிருக்கிறார். ஆரவ்விடம் இயக்குநர், விண்வெளியில் இருப்பதுபோல் நடிக்கவேண்டும். உனக்கு விருப்பமா? என்று கேட்டார். மேலும் நடனம் ஆடவேண்டும் என்றார். எல்லாவற்றிற்கும் என்னால் முடியும் என்றான். நடனம் கற்றுக்கொள்கிறேன் என்றும் சொன்னான். அவனுடைய அந்த தன்னம்பிக்கை எனக்கும் படக்குழுவினருக்கும் மிகவும் பிடித்திருந்தது. இப்போது என்னோடு இந்தப் படத்தில் அறிமுகமாகி இருக்கிறான். அவனுக்கும் உங்களின் ஆதரவை வழங்குமாறு தந்தையாகவும், சக கலைஞராகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். "நல்ல படம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று மக்கள் கொடுக்கும் நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த நம்பிக்கையில்தான் 'மிருதன்', 'டிக் டிக் டிக்' மாதிரி வித்தியாசமான படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன்," என்றார் ஜெயம் ரவி.

