முன்னிலை வகிக்கும் கோடம்பாக்க நாயகிகள்

முன்னிலை வகிக்கும் கோடம்பாக்க நாயகிகள்

2 mins read
d01382b8-01ab-4c54-b9ae-3ef37e3b607a
-

"முதலிடம் பிடிப்பது நோக்கம் அல்ல. நல்ல கதைகள்தான் முக்கியம்," என்று சொல்வதுதான் திரையுலக நாயகிகளின் வழக்கம். ஆனால் முதல் ஐந்து இடங்களுக்குள் தாங்கள் இருப்பதை உறுதி செய்வதற்கு படாதபாடுபடுவது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். முன்பு படங்களின் எண்ணிக்கையை வைத்து நடிகைகளின் அந்தஸ்து தீர்மானிக்கப்பட்டது எனில், காலப்போக்கில் சம்பளம்தான் முக்கியம் என்றானது. இப்போது அதிலும் மாற்றம் வந்துவிட்டது எனலாம்.

தற்போது ஒரு படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு, அதில் நாயகிகளின் பங்களிப்பு, நடிப்பு, வாங்கும் சம்பளம் என அனைத்தையும் கவனத்தில் கொண்டு நடிகைகளின் அந்தஸ்தை ரசிகர்கள் முடிவு செய்கிறார்கள். அந்த வகையில் இன்றளவும் 'டாப் 5' பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் நயன்தாரா. நாயகிக்கு முக்கியத்துவம் அளித்த 'டோரா' படம் படுத்துவிட்டாலும், அதுவரை கவர்ச்சித் தாரகையாக அறியப்பட்ட நயன்தாரா, 'அறம்' மூலம் கருத்து சொல்லக்கூடிய இடத்துக்கு உயர்ந்திருக்கிறார்.

"நயன்தாரா திரையுலகுக்கு வந்து பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவரது மார்க்கெட்டில் கொஞ்சம்கூட தொய்வே கிடையாது. இன்றைய தேதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மும்மொழிகளிலும் அவரை அடித்துக் கொள்ள ஆளும் இல்லை," என்கிறார்கள் கோடம்பாக்க விவரப் புள்ளிகள். சென்னையில் வளர்ந்த வழக்கறிஞரான அதிதி பாலன், கடந்தாண்டு இறுதியில் 'அருவி'யாகப் பொழிந்திருக்கிறார். ரஜினிகாந்தே வலிய அழைத்துப் பாராட்டி தங்கச் சங்கிலி பரிசளிக்கும் அளவுக்கு அசத்தலான நடிப்பை வழங்கியவர். முன்னணி நடிகைகளே நடிக்கத் தயங்கிய கதாபாத்திரத்தை தைரியமாக ஏற்று அசத்தியுள்ளார்.

நடிப்புக்கு அடுத்து கவர்ச்சியாகவும் இருப்பதால் ரகுல் பிரீத் சிங்கின் சந்தை நிலவரம் படுஜோராக உள்ளது. இன்றைய தேதியில் அனைத்து முன்னணி நாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து, நயன்தாராவுக்கு இணையாக வளர்ந்து கொண்டிருக்கிறார் அம்மணி. தமிழில் 'தடையற தாக்க'வில் சிறுவேடத்தில்தான் நடித்தார். 'என்னமோ ஏதோ'வில் ஏதோ வந்து போனார். அதன் பிறகு சுக்ரதிசைதான். 'ஸ்பைடர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' என்று ரகுலின் வெற்றி வலம் படுவிறுவிறுப்பாக இருக்கிறது. மஞ்சிமா மோகன், கீர்த்தி சுரேஷ், நிக்கி கல்ராணி என்று மற்றவர்கள் எல்லாம் மேற்கண்டவர்களை விட பின்தங்கியே உள்ளனர்.

ரகுல் பிரீத் சிங்