ராஜசேகர்: இது காத்திருப்போரின் கதை

ராஜசேகர்: இது காத்திருப்போரின் கதை

2 mins read
c0cc6be5-e7d1-4d54-9d59-917dd08ee295
-

ரயில் நிலையத்தில் ஒரே நாளில் நடக்கும் கதை 'காத்திருப்போர் பட்டியல்'. 'மரியான்' பரத்பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த பாலையா டி.இராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார். சச்சின் நாயகனாகவும் நந்திதா நாயகியாகவும் நடித்துள்ளனர். ரயில் நிலையத்தில் நடக்கும் கதை என்றதும் கடத்தல் அல்லது வெடிகுண்டு மிரட்டல் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம் என்கிறார் ராஜசேகர். அதைவிட சுவாரசியமாக இருக்குமாம்.

"படத்தின் தலைப்பைக் கேட்ட பிறகு ரயிலில் செல்ல முன்பதிவு செய்துவிட்டு பயணச்சீட்டு உறுதியாகாமல் தவிப்பவர்களின் அனுபவத் தொகுப்பா? என்று கேட்கிறார்கள். அதுவல்ல கதை.

"இந்திய ரயில்வேயில் போலிசுக்கு எனத் தனிப்பிரிவு உள்ளது. தண்டவாளத்தைக் கடப்பவர்கள், ரயில் நிலையத்தை அசுத்தம் செய்பவர்கள் உள்ளிட்ட சிறு சிறு தவறுகள் செய்தவர்களைப் பிடித்து வந்து அபராதம் விதிப்பதே அவர்களின் முக்கிய வேலை. "அவ்வாறு பிடிபடுபவர்களை ரயில் நிலையத்தில் ஓர் அறையில் அடைத்துவிடு வார்கள். அபராதம் செலுத்திவிட்டுக் கிளம்ப பல மணி நேரம் ஆகிவிடும். இதனால் ஒரு நாள் முழுவதும் செய்ய வேண்டிய பணிகளைச் செய்து முடிக்க இயலாமல் தவிப்பார்கள்.

"இவ்வாறு ரயில்வே போலிசாரிடம் சிக்கி அபராதம் செலுத்த ரயில் நிலையத்தில் காத்திருக்கும் 15 பேர் சம்பந்தப்பட்ட கதை தான் இது. இதை இளையர்கள் விரும்பும் வகையில் ஜாலியாக, இளமை ததும்பச் சொல்லி இருக்கிறேன்," என்கிறார் ராஜசேகர்.

இப்படத்தில் சச்சின், நந்திதா தவிர ஸ்வேதா, அருள்தாஸ், அப்புக்குட்டி, சென்ட்ரா யன், மனோபாலா, மயில்சாமி, 'நான்கடவுள்' ராஜேந்திரன், அருண் ராஜா காமராஜ், சித்ரா லட்சுமணன் என்று நமக்கு கலகலப்பூட்டவும், ரசிகர்களை வயிறு குலுங்க வைக்கவும் பெரிய நட்சத்திரப் பட்டாளமே களமிறக்கப்பட்டுள்ளது.