'நாம் சோர்ந்துவிட்டால் அந்த இடத்தில் வேறொருவர் இருப்பார்'

2 mins read
dd948b26-8121-4f17-9459-aec5193bb4ec
-

நேற்று முன்தினம் ஜீவா, நிக்கி கல்ராணி நடிக்கும் 'கீ' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றபோது விஜய் சேதுபதி, "திரையில் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். சற்று சோர்வாக இருந்தாலும் அந்த இடத்தை மீண்டும் பிடிக்கமுடியாது. தயாரிப்பாளர்கள் பல பிரச்சினைகளுக்கு இடையே படம் எடுக்கிறார்கள். அவர் களைப் பாராட்டியே ஆகவேண்டும்," என்றும் பேசினார். அவருடைய பேச்சு அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

"திரைக் கலைஞர்கள் என்றாலே ஒரு மாதிரிப் பார்க்கிறார்கள். தரம் தாழ்த்திப் பேசுகிறார்கள். மொத்தமாக திரைத் துறையினரைக் கைகாட்டிப் பேசும்போது வருத்தமாக இருக்கிறது. எங்களைத் தரக்குறைவாக நினைப்பவர்கள் திரைக்கு வந்து ஒரு படம் எடுத்துப் பாருங்கள். அப்போதுதான் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்களுக்குரிய பிரச்சினைகள் உங்க ளுக்குத் தெரியும். ஒரு படம் எடுத்து முடிக்கும்போது உயிர் போய் உயிர் வருகிறது.

"ஒரு படம் ஓடும் என்ற நம்பிக்கையில்தான் எல்லோரும் வேலை செய்கிறோம். அதற்குத்தான் முக்கியத்துவம் தருகிறோம். படம் எடுக்க முயலும் தயாரிப்பாளரை நாம் பாராட்டவேண்டும். அந்தப் படம் ஓடவில்லையென்றால் அவருக்குத்தான் பாதிப்பு. ஓடாத அந்தப் படத்தை வைத்து அவரால் எதுவும் செய்ய முடியாது. கண்ணுக்குத் தெரியாத ஒரு வெற்றியை நம்பி பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர் களின் தைரியத்தை மிகப் பெரிய அளவில் பாராட்டவேண்டும்.

"அதற்கான பொறுப்பை உணர்ந்து தான் இங்கு அனைவரும் படம் எடுக்கிறோம். அந்தப் பயமும் பாதுகாப்பும் தயாரிப்பாளர் உள்ளிட்ட எல்லோருக்கும் உள்ளது. ஒரு நடிகனின் நான்கு படங்கள் தொடர்ந்து ஓடவில்லையென்றால் அனைவரும் அவர் பெயரை மறந்ததுபோல் இருப்பார்கள். அந்த நடிகனைத் திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள். அப்போது அந்த நடிகன் என்ன கத்திப் பேசினாலும் கண்டுகொள்ள அங்கு யாரும் இருக்கமாட்டார்கள். நமக்கு இருக்கும் வாய்ப்புகளை வைத்துதான் இந்த திரைத்துறையில் நமக்கு மரியாதை கிடைக்கும்.