பாலியல் தொல்லை: ராதிகா அறிவுறுத்து

1 mins read
ff6af31d-0c93-44e4-88bf-d8f843cd6b34
-

தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து ஏற்கெனவே பேசிவிட்டதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். தாம் எதையும் மறைப்பதில்லை என்றும் அவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். "சில அனுபவங்கள் பற்றி ஏற்கெனவே பேசிவிட்டேன். அதே வேளை, பிறரது பாலியல் தொல்லை விவகாரம் குறித்து பேசமாட்டேன்" "பாலியல் தொல்லை பற்றி நடிகைகள் யாரும் தைரியமாகப் பேசுவது இல்லை. அப்படிப் பேசினால் அவர்களுடைய எதிர்காலம் வீணாகிவிடும். திரையுலகம் சார்ந்த அவர்களுடைய கனவு வெறும் கனவாகவே முடிந்துவிடும்.

இதனால் தான் நடிகைகள் யாரும் பாலியல் தொல்லை குறித்து வாய் திறப்பதே இல்லை," என்கிறார் ராதிகா ஆப்தே. பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் தைரியமாகப் பேச வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அத்தகைய வற்புறுத்தல்களை எதிர்கொள்ளும்போது அவற்றை எதிர்க்கவேண்டும் என்றார். "எதிர்க்கவில்லை என்றால் இத்தகைய தொல்லைகள் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்த முடியாது. பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாகப் பேசுவோருக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்," என்றும் ராதிகா தெரிவித்துள்ளார்.