ஜெயம் ரவி: மிகவும் ஆசைப்பட்டு நடித்தோம்

ஜெயம் ரவி: மிகவும் ஆசைப்பட்டு நடித்தோம்

2 mins read
7b0c8174-9e95-4711-8f1c-850aac5b998f
-

விண்வெளி தொடர்பான கதையுடன் உருவாகி இருக்கிறது 'டிக் டிக் டிக்'. இது தன் திரை வாழ்வில் முக்கியமான காலகட்டம் என்று குறிப்பிடும் இப்படத்தின் நாயகன் ஜெயம் ரவி, இப்படத்துக்காக தன் உழைப்பை பன்மடங்கு கொட்டி இருப்பதாகச் சொல்கிறார். 'தனி ஒருவன்' படத்துக்குப் பிறகு ரசிகர்கள் தன்னை அதிகம் கவனித்து வருவதாகக் குறிப்பிடும் அவர், ரசிகர்களை திருப்திபடுத்த அதிகம் உழைப்பது உடலுக்கு சிரமமாக இருந்தாலும் அதனால் கிடைக்கும் வரவேற்பும் அங்கீகாரமும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறுகிறார்.

"முன்பெல்லாம் ஓரளவு வித்தியாசமான கதாபாத்தி ரங்கள், கொஞ்சம் கொஞ்சம் வேறுபாடு உள்ள படங்கள் என்று நடித்துக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட ஒரு படம் குறித்த நினைவுகள், என் கதாபாத்திரத்துக்கான வீட்டுப் பயிற்சி என எல்லாம் சுலபமாக இருந்தன. "இப்போது அப்படி அல்ல. தினம் தினம் கூடுவிட்டுக் கூடு பாய்வதுபோல் இருக்கிறது. அந்தளவு உழைக்க வேண்டியுள்ளது."

தமிழில் வெளியாகும் முதல் விண்வெளிப் படம் எனும் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது 'டிக் டிக் டிக்'. அது குறித்து நினைக்கும்போதே உற்சாகமாக இருப்பதாகச் சொல்கிறார் ஜெயம் ரவி. இப்படி ஒரு படத்தை கோடம்பாக்கத்தில் உருவாக்க முடியும் என்று நினைப்பதும் நிரூபிப்பதுமே மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார். "ஏதோ வந்தோம் போனோம் என்று இல்லாமல், ஒவ் வொரு காட்சியும் அவ்வளவு நுணுக்கமாகச் செதுக்கப் பட்டுள்ளது. எனவே முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டியிருந்தது. "இதற்கு முன்பு தமிழில் இந்த விதமாக ஒரு படம் வெளிவந்ததாகச் சொல்ல முடியாது. வித்தியாசமாக எடுத்தால், அதில் விஷயம் இருப்பதாகத் தெரிந்தால் ஆதரிக்க இப்போது தமிழ் மக்கள் தயங்குவது இல்லை. அந்த நம்பிக்கையை முன்வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கோம்."