நடிகை ஒருவர் காதல் வலையில் விழுந்துள்ளார் என்று தகவல் வெளியாவது ஒன்றும் பரபரப்பான விஷயமல்ல. ஆனால் அவர் யாரைக் காதலிக்கிறார் என்று தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் நிச்சயம் ஆர்வமாக இருப்பர். அந்த வகையில் நடிகை ரகுல் பிரீத் சிங்கின் காதலர் யார் என்பதை அறிய தமிழ், தெலுங்கு திரை ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ரகுலும், 'பாகுபலி' புகழ் ராணா டகுபதியும் காதலிப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது.
ஆனால் ரகுல் இதை மறுத்துள்ளார். தானும் ராணாவும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே எனவும் கூறியுள்ளார். "எங்களது நட்புக் குழுவில் இருபது பேர் இருக்கிறோம். அவர்களில் ஒரு சிலர் தான் திருமணம் ஆகாதவர்கள். எனவே, திருமணம் ஆகாத நாங்கள் சந்தித்துப் பேசிக்கொள்வதைப் பார்ப்பவர்கள், இதுபோன்ற கிசுகிசுக்களைப் பரப்பி வருகிறார்கள். "நானும் ராணாவும் இத்தகைய செய்திகளைப் பார்த்து சிரித்துக் கொள்வோம். இப்படிச் சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?," என்று கேட்கிறார் ரகுல் பிரீத் சிங்.

