'பாகமதி' தெலுங்குப் பதிப்பு இதுவரை ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இது தயாரிப்புத் தரப்பும், திரை விமர்சகர்களும் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் என்கிறார்கள். தமிழிலும் இப்படத்துக்கு வரவேற்புள்ளது. இந்நிலையில் புதுப் படங்கள் எதிலும் அனுஷ்கா ஒப்பந்தமாகவில்லையாம். அதற்கான காரணத்தை அவரே விவரித்துள்ளார். 'பாகுபலி'க்குப் பிறகு புதுப் படம் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை என்று கூறியுள்ளார் அனுஷ்கா.
அண்மையில் வெளியீடு கண்ட 'பாகமதி'யும் கூட 'பாகுபலி'க்கும் முன்பே ஒப்புக் கொண்ட படம் தானாம். "ஒரு படத்தின் வெற்றியை அனுபவிக்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை. 'பாகுபலி'யின் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினேன். இப்போது 'பாகமதி'க்குக் கிடைத்துள்ள வரவேற்பும் அதே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
"'பாகமதி' படப்பிடிப்பில் எனக்கு சில காயங்கள் ஏற்பட்டன. அவை ஆற வேண்டும் என்பதற்காக புதிய படங்களை ஏற்கவில்லை. உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகளும் செய்து வருகிறேன். நல்ல கதைகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன்," என்கிறார் அனுஷ்கா.

