சற்குணம் இயக்கத்தில் விமல் - ஓவியா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'களவாணி' படத்தின் அடுத்த பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'களவாணி'. சற்குணம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விமல் நாயகனாக நடித்திருந்தார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியா (படம்) இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விமலின் திரையுலக வாழ்க்கையைப் புதிய பாதைக்குத் திருப்பிய 'களவாணி' படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் அவரது டுவிட்டர் பக்கத்தில் 'களவாணி-2' படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். `கே-2' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திலும் விமல் - ஓவியா இணைந்து நடிக்கின்றனர். 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியா காஞ்சனா-3 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து, தற்போது 'களவாணி-2' படத்தில் நடித்து வருகிறார்.
சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு என முதல் பாகத்தில் நடித்த பலரும் இந்தப் படத்திலும் தொடர்வதாகக் கூறப்படுகிறது. வர்மான்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் சற்குணம் இந்தப் படத்தை இயக்கி, தயாரிக்கிறார். ஜே.ஜெயக்குமார் மற்றும் டி.ஆர்.ரமேஷ் இணைத் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றி நடை போட்ட 'களவாணி' திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்கப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.

