நந்திதா: மறக்கமுடியாத அனுபவம்

2 mins read
1e9f882c-f392-48a1-b8f0-53fbd816581a
-

'அசுர வதம்' என்ற தலைப்பில் தயாராகும் புதிய படத்தில் சசிகுமாருடன் ஜோடி சேர்ந்துள்ளார் நந்திதா. இதுவரை தாம் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இனி தன் நடிப்புப் பசிக்கு தீனி போடும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கவேண்டும் என்பதே நந்திதாவின் விருப்பமாக உள்ளது. "தமிழ் ரசிகர்கள் என்னை நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு சில படங்களில் நடித்துள்ளேன். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் எனக்கு ரசிகர்களும் நன்கு ஆதரவு அளித்துள்ளனர்.

"இந்த அடித்தளத்தைப் பயன்படுத்தி இனிமேல் சவாலான, என் திறமையை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களில் நடிப்பதையே எதிர்பார்க்கிறேன். அத்தகைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக 'அசுர வதம்' அமைந்துள்ளது."

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து? "அருமையான, அழகான அனுபவம். திண்டுக்கல், கொடைக்கானலில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கினார்கள். இதில் எனது பாத்திரம் அதிகமான பொறுப்புகளைச் சுமக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. "சசிகுமார் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அவர் பழகுவதற்கு இனிமையான நண்பர். எனக்கு நிறைய நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார்.

"கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்த போது ஒட்டுமொத்த படக்குழுவும் உற்சாகத்துடன் செயல்பட்டது. அங்கு நள்ளிரவில் கூட படப்பிடிப்பு நடந்தது. "மலைப்பகுதிகளில் இரைச்சலுடன் வீசும் காற்றுக்கு மத்தியில் காட்சிகளை எடுத்த போது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட புரியாது. அதனால் சைகை மூலம் பேசிக் கொள்வோம்.

"சில்லிடும் குளிர் காற்று, பரந்த வனப்பகுதி என அனைத்துமே மனதில் கல்வெட்டுப் போல் பதிந்துள்ளது. சில சமயங்களில் ஜீப் வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வோம். அதேபோல் படப்பிடிப்பு நடக்கும் சில இடங்களுக்கு வாகனத்தில் செல்லமுடியாது என்பதால் நடந்தே சென்றோம். "உள்ளூர் மக்களே குளிருக்கு பயந்து மாலை நேரத்தில் வெளியே செல்ல தயங்கும் நிலையில், எங்கள் படக்குழு எதுகுறித்தும் கவலைப்படாமல் கடுமையாக உழைத்ததால் படம் சிறப்பாக வந்துள்ளது.

"இது சராசரி ரசிகர்களுக்கும் புரியக்கூடிய வகையில் உருவாக் கப்படும் குடும்பப் படம். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய சம்பவங்களே இப்படத்தில் இடம்பெற்றுள்ளன என்பதால் ரசிகர்கள் நிச்சயம் இந்தக் கதையுடன் ஒன்றிப் போவர்," என்கிறார் நந்திதா.