ரசிகர்களை நேரில் சந்திக்கும் லாரன்ஸ்

ரசிகர்களை நேரில் சந்திக்கும் லாரன்ஸ்

1 mins read
27003c06-648a-4056-870d-8e348317b0b2
-

இனி எந்த ஒரு ரசிகரும் தன்னைப் பார்க்க சென்னைக்கு வரவேண்டாம் என்று நடிகர் லாரன்ஸ் கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். கடலூரைச் சேர்ந்த ஆர்.சேகர் என்ற ரசிகர் லாரன்சை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார். அதற்காக சென்னை வரும்போது விபத்தில் சிக்கி எதிர்பாராத விதமாக இறந்து போனார். இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளார் லாரன்ஸ். அதுவே அவரை இவ்வாறு முடிவெடுக்க வைத்துள்ளது. "சேகரின் குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறியதுடன் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டேன்.

அவரது இழப்பு எனக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்திவிட்டது. அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். "பயணத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க விரும்புகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன். "சந்திக்கும் இடம், நேரம், தேதி ஆகிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும்," என்று லாரன்ஸ் அறிவித்துள்ளார்.