ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவு திருமணத்தில்தான் முடியும் என்று எதிர்பார்க்க முடியாது என்கிறார் தீபிகா படுகோன். தமக்கும் நடிகர் ரன்வீர் சிங்குக்கும் இடையே உள்ள உறவு பல கட்டங்களைக் கடந்து வலுவாகி இருப்பதாகவும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் மனம் திறந்து கூறியுள்ளார். 'பத்மாவத்' படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனுக்கும் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்ததுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக வும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தனது திரை வாழ்க்கை, காதல் அனுபவங்கள் குறித்து தீபிகா படுகோன் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். சினிமாவில் சாதிப்பதற்கு நடிகர், நடிகைகள் நிறைய தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்றும் சொந்த பந்தங்கள், குடும்பங்கள், நண்பர்களைவிட்டு அவர்கள் விலகிச் செல்ல வேண்டியிருக்கலாம் என்றும் தீபிகா தெரிவித்துள்ளார்.
"நானும் அதற்குத் தயாராக இருந்ததால்தான் இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வர முடிந்தது. 'பத்மாவத்' போன்ற படங்களில் நடித்தால் இன்னும் நிறைய கஷ்டப்பட வேண்டும். "இவ்வளவு உழைத்தும் அந்தப் படம் தொடர் பாக சர்ச்சை ஏற்பட்டது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அதையும் மீறி படம் வெற்றிகரமாக ஓடி பட்ட கஷ்டங்களை மறக்கச்செய்தது," என்று தீபிகா கூறியுள்ளார்.
சரித்திர கதைகளைத் தவிர்த்து சாதாரண பெண்ணாக ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் தீபிகாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் சாதாரண பெண்கள்தான் முக்கியமானவர்களாக இருப்பதாகச் சுட்டிக்காட்டுபவர், கணவர், குழந்தைகள், அம்மா, மாமியார், மாமனார் என்று அனைவரையும் கவனித்துக்கொள்வதும் அந்தச் சாதாரண பெண்கள்தான் என்கிறார். அத்தகைய பெண்களின் உழைப்புக்கு மரியாதை இல்லை என்பதும் ஆண்களை மட்டுமே சமூகம் மதிக்கிறது என்பதும் தீபிகாவுக்கு கவலை அளிக்கிறதாம்.

