முன்பெல்லாம் காதல், திருமணம் என்று பேசத் துவங்கினாலே நடிகைகள் ஓட்டம் பிடிப்பர். இப்போது கால சுழற்சியில் பல மாற்றங்கள். எது குறித்து கேள்வி கேட்டாலும் நடிகைகள், குறிப்பாக இளம் நாயகிகள் நறுக்குத் தெறித்தாற்போல் கனகச்சிதமான பதில்களை வழங்குகிறார்கள்.
இந்தாண்டு காதலர் தினம் நயன்தாராவை பொறுத்தவரையில் மிகச் சிறப்பானதாக இருந்திருக் கும் என நம்பலாம். ஏனெனில் 'அறம்' படத்தின் வெற்றியால் கோடம்பாக்கத்தில் அவரது மதிப்பு உயர்ந்துள்ளது. நயனின் காதலர் விக்னேஷ் சிவனுக்கும் இந்த காதலர் தினம் இனிப்பானதாக அமைந்துள்ளது எனலாம். அவர் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து சிவகார்த்திகேயன் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகத் தகவல். அநேகமாக அடுத்தாண்டு காதலர் தினத்துக்குள் இது நடந்தேற சாத்தியமுண்டு.
நடிகை ரகுல் பிரீத் சிங்கை காதலிப்பதாக சிறு வயதில் பலர் கூறியுள்ளனராம். ஆனால் அவர்களது காதலில் உண்மை இல்லை என்கிறார். "சிறு வயதில் என்னை காதலிப்பதாகக் கூறி பலர் பின் தொடர்ந்தார்கள். அவர்களை நம்பவில்லை. அதேசமயம் எனக்கு காதல் மீது நம்பிக்கை உள்ளது. காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். "சிறு வயதில் நிறைய சேட்டைகள் செய்வேன். பையன் மாதிரியே இருக்க விரும்புவேன். தலைமுடியில் ஜடை போடுவது, நெற்றியில் பொட்டு வைப்பது பிடிக்காது. என் நட்பு வட்டத்தில் அப்போது இருந்தவர்கள் எல்லோருமே ஆண்கள்தான். தொடக் கத்தில் யாரும் என்னை காதலுடன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கல்லூரிக்கு வந்த பிறகு என் நடவடிக்கைகள் மாறி பெண் போல் நடந்து கொண் டேன்," என்கிறார் ரகுல் பிரீத் சிங்.
அனுஷ்காவின் அனுபவமும் இதேபோன்றுதான் உள்ளது. கல்லூரி நாட்களில் அவரைப் பலர் காதலித்தனராம். ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.
"எவ்வளவோ பேர் என்னைச் சுற்றி வந்தார்கள். அவர்கள் காதலுடன் பார்த்தாலும் நான் திரும்பிப் பார்க்கவில்லை. இதனால் வெறுத்துப்போய் விலகி விட்டார்கள். எனக்கு யார் மீதும் காதல் ஏற்படவில்லை. "ஆனால் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மீது மட்டும் ஈர்ப்பு ஏற்பட்டது. அவரின் தீவிர ரசிகையாகி விட்டேன். நாளடைவில் அவர் மீதான ஆசை அதிகமாகிக் கொண்டே வந்தது.
"அதை ஈர்ப்பு என்றோ காதல் என்றோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவரை சந்திக்கவே இல்லை. அதன்பிறகு என் வாழ்க்கையில் காதல் கதைகள் இல்லை," என்கிறார் அனுஷ்கா.

