'தைரியம் அளித்தார் பாலா'

2 mins read
0a02a570-fcdf-4303-9026-133cbb77003d
-

வாழ்த்துகள் குவிவதால் இரட்டிப்பு மகிழ்ச் சியுடன் வலம் வருகிறார் கோடம்பாக்கத்தின் புது வரவான இவானா. அம்மணியின் பூர்விகம் கேரளா. இன்னும் பள்ளிக்கூடத்தை தாண்டவில்லை. அதற்குள் மலையாளத்தில் சில படங்களில் தலைகாட்டியவரை தமிழில் நாயகியாக அறிமுகம் செய்துள்ளார் இயக்குநர் பாலா. 'நாச்சியார்' படத்தில் வெள்ளந்தி கர்ப்பிணிப் பெண்ணாக, முதிர்ச்சியான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன்வசமாக்கி உள்ளார் இவானா. 'நாச்சியார்' பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லையாம். "கேரளாவின் கோட்டயம் அருகே உள்ள பகுதியில் வசிக்கிறோம். தற்போது 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அப்பா சாதிக், அம்மா டின்சி தவிர வீட்டில் தங்கையும் இரட்டைச் சகோதரர்களும் இருக்கிறோம்.

"என் சகோதரர்களும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரங்கள் தான். நான் குழந்தை நட்சத்திரமாக நடித்த மலையாளப் படங்களில் ஏதேனும் ஒன்றை பாலா சார் பார்த்திருக்க வேண்டும். அதனால் தான் 'நாச்சியார்' படத் தேர் வுக்காக என்னையும் அழைத்திருந்தார். "உடனே என்னைத் தேர்வு செய்துவிடுவார் என்கிற எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை. எனினும் நான் தேர்வு செய்யப்பட்டேன் என்பது ஆச்சரியம் அளித்தது. நான் பாலா சார் இயக்கத்தில் நடிப்பதை அறிந்ததும் பலரும் பலவிதமாக எனக்கு அறிவுரைகள் கூறினர்.

"பாலா மிகவும் கோபக்காரர், ரொம்ப கண்டிப்பானவர் என்று சிலர் கூறியதைக் கேட்டு பயந்துபோனேன். தொடக்கத்தில் படப்பிடிப்புக்குச் சென்றபோது உதறல் எடுத்தது. இருப்பினும் தைரியத்தை வர வழைத்துக்கொண்டு இயல்பாக இருக்க முயற்சி செய்தேன். "எல்லோரும் சொன்னதற்கு நேர்மாறாக இயக்குநர் நன்றாகப் பேசினார். வெகு விரைவிலேயே அவர் மீதான பயம் பறந்து போனது. எனக்கு நல்ல கூட்டாளியாகி விட்டார்," என்கிறார் இவானா.