உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உரு வாகி வருகிறது 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. மாறன் இயக்குகிறார். அருள்நிதி நாயகனாக நடிக்க அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார் மகிமா. படம் முழுவதும் திகிலாக இருக்குமாம். என்ன கதை? சில விஷயங்களுக்கும் இரவுக்கும் எப்போதும் ஒரு நெருக்கம் இருக்கும். இரவு நேரத்தில் எந்தத் தவறு செய்தாலும் வெளியே தெரியாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், யாரேனும் ஒருவர், எங்கேனும் நம்மைப் பார்த்தபடிதான் இருப்பார்கள். ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாம் செய்த தவறு வெளிப்படும். அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்ளும் நாயகன், அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதை திகில் கலந்து சொல்லப் போகிறாராம் மாறன்.
"ஒருநாள் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்று தொடங்கும் ஒரு பழைய பாடலைக் கேட்டுக்கொண்டு இருந்தேன். அந்த வரி என் மனதை வெகுவாகக் கவர்ந்தது. எனவே அதையே தலைப்பாக வைத்தோம். "தவிர, இந்தப் படத்தின் கதை ஒரே நாளில் நடப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. இரவில் தொடங்கி, மறுநாள் மாலையில் முடிவது போன்று திரைக்கதை அமைந்துள்ளது. இடையிடையே பழைய சம்பவங்கள் சிலவும் வந்து போகும். "இந்தக் கதையைப் படமாக்க ஓராண்டாக முயற்சி செய்தேன்.
நிறைய இடங்களில் இக்கதையைச் சொல்லி இருக்கிறேன். நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். பிறகு எந்தப் பதிலும் வராது. பிறகு தான் 'மரகத நாணயம்' தயாரிப்பாளரைச் சந்தித்து கதை சொன்னேன். உடனே படமாக எடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். இப்படியொரு கதைக்காகத் தான் காத்திருந்தார்களாம். வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி," என்கிறார் மாறன். இதில் அருள்நிதி வாடகை கார் ஓட்டுநராக நடிக்கிறார். படப்பிடிப்பின்போது வெகுவாக ஒத்து ழைத்தாராம். அறிமுக இயக்குநர் என்றாலும்கூட தம்மை அனுபவ இயக்குநரைப் போல் மதித்து, சுதந் திரமாகச் செயல்பட அனுமதித்ததாக அருள்நிதியைப் பாராட்டுகிறார் மாறன்.

