வித்யா பாலன் நடிப்பில் வெளியாகிய 'துமாரி சுலு' படத்தின் தமிழ்ப் பதிப்பில் வித்யாபாலனின் கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவிருக்கும் நிலையில், "நான் வித்யா பாலனின் தீவிர ரசிகை," என்று ஜோதிகா கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு வித்யாபாலன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இந்திப் படம் 'துமாரி சுலு'. இந்தப் படம் தற்போது தமிழில் 'உங்கள் ஜோ' என்ற பெயரில் தயாராகிறது. இதில் இந்தியில் வித்யா பாலன் நடித்த வானொலி நிகழ்ச்சி தொ கு ப் பா ள ர் வேடத்தை தமிழ்ப் பதிப்பில் ஜோதிகா ஏற்று நடிக்கிறார். இந்தப் படத்தை, பப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ஜி.தனம்ஜெயன் தமிழில் தயாரிக்கிறார். ராதாமோகன் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் நடிப்பது குறித்துக் கூறிய ஜோதிகா, "நான் வித்யா பாலன் தீவிர ரசிகை. அவர் நடித்த படங்கள் எதையும் பார்க்காமல் விட்டதில்லை. "வித்யாபாலன் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் 'துமாரி சுலு'. "வித்யாபாலன் நடித்த வேடத்தில் நான் தமிழில் நடிப்பது என்னை கவுரவப் படுத்துவதாகவே கருதுகிறேன்" என்றார். இயக்குநர் ராதாமோகன், "இந்தப் படத்தைத் தமிழில் இயக்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. "ஜோதிகாவுடன் ஏற்கெனவே 'மொழி' படத்தில் பணிபுரிந்திருக்கிறேன். ஜோதிகா நடிப்பில் இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.

