இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகரான பாலையா டி.இராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காத்திருப்போர் பட்டியல்'. அறிமுக இயக்குநரான இவர், 'மரியான்' இயக்குநர் பரத்பாலாவிடம் பாடம் பயின்றவர். இராஜசேகரின் தாயார் தீவிர சினிமா ரசிகையாம். தன் மகனும் திரைப்பட இயக்குநராக வர வேண்டும் என விரும்பினாராம். எனவே தாயின் ஆசையை நிறைவேற்றும் வகையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு, சினிமை உலகிற்கு வந்துவிட்டார் இராஜசேகர்.
"பரத்பாலா சாரிடம் சேர்வதற்கு முன்பு தெலுங்கில் இயக்குநர் சூரியகிரணிடம் வேலை பார்த்தேன். படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சிக்கும் முன்பு 'கிளாப்' அடிப்பார்கள். அந்த வேலை முதல் காட்சிகளை சரியாகப் பிரித்து படப்பிடிப்பு நடத்துவது வரை அனைத்தையும் அவரிடம் கற்றுக்கொண்டேன். "பிறகு தெலுங்கில் நூறு படங்களுக்கு மேல் இயக்கிய தாசரி நாராயணராவ் சாரிடம் திரைக்கதை அமைக்கும் வித் தையைத் தெரிந்துகொண்டேன். அந்த அனுபவத்துடன் தமிழ் சினிமாவுக்கு வந்தது கை கொடுத்தது. "சினிமாவின் அண்மைய நுணுக்கங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது பரத்பாலா சார். இதற்காக இவர்கள் அனைவருக் கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்."

