நடனம், சண்டைக் காட்சியில் வெளுத்துக் கட்டும் தன்‌ஷிகா

நடனம், சண்டைக் காட்சியில் வெளுத்துக் கட்டும் தன்‌ஷிகா

2 mins read
f924141b-b84e-45c2-a4bc-09198ba92e4b
-

'கபாலி' படத்தில் நடித்த சாய் தன்‌ஷிகா, முதன்முதலில் 'மேளா' என்ற ஒரு தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். அதிரடி சண்டை, த்ரில் காட்சிகளுடன் உருவாகும் இந்தப் படத்தில் தன்‌ஷிகா 'டூப்' போடாமல் சண்டைக் காட்சிகளில் வெளுத்துக் கட்டியுள்ளார். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் நடிகை என்ற முத்திரையுடன் கோடம்பாக்கத்தில் நுழையும் பெண்களுக்குப் போதிய வாய்ப்புக் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே உள்ளது தமிழ்த் திரையுலகில்.

சாய் தன்‌ஷிகாவுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான். ஆனால் ரஜினியுடன் 'கபாலி'யில் நடித்தபிறகு நிலைமை சற்றே பரவாயில்லை என்று கூறலாம். அண்மையில் 'சினம்' என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்‌ஷிகா. இந்தக் குறும்படம் கோல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் 'சினம்' குறும்படத்திற்கு கிடைத்தன.

"நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எந்த கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்துத் திரைக்கதையை உருவாக்கு கிறார்களோ அந்தத் தருணம்தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது. தெலுங்குத் திரையுலகில் புகழ்பெற்ற கதாசிரியர் கிரண். அவர் என்னைச் சந்தித்து, உங்களை மனதில் வைத்து 'மேளா' என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன் என்றார்.

"இந்தக் கதையின் மூலமாகத்தான் தான் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது கதையின் நாயகியை மையப்படுத்திய திரைக்கதை. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இதனை உருவாக்கியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு முழுக்கதையையும் சொன்னார். அதைக் கேட்ட நான் பிரமிப்பில் ஆழ்ந்தேன். அந்தளவிற்கு அந்தக் கதை என்னைக் கவர்ந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். "படத்தின் கதையைக் கேட்டபோதே நான் சண்டைக் காட்சிகளில் 'டூப்' போடாமல் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். பொதுவாக நான் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிக்கவேண்டும் என்றால் நான் 'டூப்' போடாமல் நடிப்பதைத்தான் விரும்புவேன். அதனால் இந்தப் படத்திலும் சண்டைக் காட்சிகளில் 'டூப்' போடாமல் 'ரோப் ஷாட்', உயரத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் நிஜமாகவே நடித்து இயக்குநரின் பாராட்டை பெற்றேன்," என்று கூறியுள்ளார் சாய் தன்‌ஷிகா.