உதயநிதி ஸ்டாலினுக்கு 'மக்கள் அன்பன்' என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கண்ணே கலைமானே'. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். மதுரை, வாடிப்பட்டியைப் பின்னணியாகக்கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 'மக்கள் அன்பன்' என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளார் சீனு ராமசாமி. "கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை 'மக்கள் அன்பன்' என்றே அழைக்கத் தோன்றியது" என 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.

