தமிழ்த் திரையுலகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக யாரும் படப்பிடிப்பு, அதன் தொடர்பான எந்தப் பணிகளையும் நடத்தக் கூடாதென தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் அதையும் மீறி விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் 'ஜுங்கா' படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் வெளிநாடு சென்றார்கள். அவர்கள் வெளிநாடு சென்ற தற்கு மற்றத் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் அதுபற்றி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனிடையே போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்ற படக் குழுவினர் அங்கிருந்து அஜர் பைஜான், ஜார்ஜியா என 'மெர்சல்' படப்பிடிப்பு நடந்த நாடுகளுக்குச் சென்று படப் பிடிப்பு மேற்கொண்டனர். இன்னும் ஒரு பாடலையும் சில காட்சிகளையும் மட்டும் எடுத்து விட்டால் படம் முடிந்துவிடுமாம். இந்தப் படத்தை விஜய் சேதுபதியின் மைத்துனர் ராஜேஷ் தான் தயாரிக்கிறார். படத்திற்கு ஏறக்குறைய விஜய் சேதுபதிதான் தயாரிப்பாளர். ஒரு நடிகராக இருந்துகொண்டு மற்ற தயாரிப் பாளர்களின் வலியைப் புரிந்து கொள்ளாமல் விஜய் சேதுபதி படப்பிடிப்பை நடத்தி வருவது அவரை வைத்துப் படம் தயாரித்த பலரையும் கோபம் கொள்ள வைத்துள்ளது.

