கோலமாவு விற்கும் பெண்ணாக நயன்தாரா

கோலமாவு விற்கும் பெண்ணாக நயன்தாரா

1 mins read
1c197cfe-e236-44ff-8dcb-b5e7c2eb01cd
-

தென்னிந்திய நடிகைகளில் முதல் இடத்தைப் பெற்றிருக்கும் நயன்தாரா நடிக்கும் படம் 'கோலமாவு கோகிலா'. இந்தப் படத்தில் நயன்தாரா கோலமாவு விற்கும் பெண்ணாக வருவதாகக் கூறுகின்றனர் படக்குழுவினர். மலையாள காலைக் காட்சி படத்தைப் போன்ற இந்தத் தலைப்பை வேறெந்த நடிகையும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள். அந்தத் துணிச்சல் நயன்தாராவுக்கு மட்டும்தான் இருக்கிறது. சிம்பு நடிப்பில் 'வேட்டை மன்னன்' படத்தை இயக்குவதாக இருந்த நெல்சன்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். 'வேட்டை மன்னன்' படம் எடுக்க முடியாமல் போய் பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு இப்போது நயன்தாராவை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் நெல்சன். தயாரிப்புத் தரப்பிலிருந்து கசிந்த வகையில் 'கோலமாவு கோகிலா'வின் கதை இதுதான்.

கோலமாவு விற்று வாழ்க்கை நடத்தும் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கோகிலா. குடும்பத்தின் வறுமையைப் போக்க கடுமையாக உழைக்கிறார். யாரும் துணையில்லாத ஓர் ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண் அழகாக இருந்தால் என்னென்ன பிரச்சினைகள் வருமோ அதெல்லாம் வருகிறது. அதையெல்லாம் சமாளிக்கிறார். இந்தப் போராட்டத்துக்கு இடையில் ஒரு கொலைப் பிரச்சினையிலும் சிக்கிக் கொள்கிறார். அதனால் வில்லன்களும் அவரைத் துரத்துகிறார்கள். கோகிலாவிடம் இருப்பது அழகு என்ற ஆயுதமும் புத்திசாலித்தனமும். இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு எதிரிகளைச் சமாளித்து தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கோகிலாவின் கதை. படத்தில் நயன்தாராவுடன் சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு நடிக்கிறார்கள், அனிருத் இசை அமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். 'லைக்கா' நிறுவனம் தயாரிக்கிறது.