தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டதாகக் கூறுகிறார் சுனைனா. வேறொன்றுமில்லை... கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசையாம். தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா'வில் நடிப்பதன் வழி சுனைனாவின் இந்த ஆசை நிறைவேறி உள்ளது. "'தெறி' படத்தில் விஜயுடன் நடித்த கதாபாத்திரம் போல் இருக்காது. கவுதம் சார் படத்தில் எனக்கு வேறு மாதிரியான பாத்திரம்," என்று உற்சாகத்துடன் சொல்கிறார் சுனைனா. சிறு வேடங்களில் நடித்தால் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு பறிபோகுமே என்று கேட்டால், அம்மணியின் பதில் சட்டென வெளிப்படுகிறது. "நிறைய பேர் இப்படிச் சொல்லிவிட்டனர். அது குறித்து நான் கவலைப்படவில்லை. குணச்சித்திர கதாபாத்திரங்களாக இருந்தாலும், அது நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு என்று தெரிந்தால், அதை நான் தவற விடுவதில்லை.
"கவுதம் சார் படத்தில் அப்படியொரு வாய்ப்பு தான் எனக்கு அமைந்திருக்கிறது. நடிகர் ராணாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்." முதன்முறையாக கவுதம் மேன னைப் பார்த்தபோது பேசுவதற்குத் தயங்கினாராம். ஆனால் கவுதமோ மிக இயல்பாக, 'வம்சம்' படத்தில் சுனைனா ஏற்றிருந்த கதாபாத்திரம் தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொன்னாராம். "அதைக் கேட்டதும் மிக உற்சாகமாக இருந்தது. அவரது படங்களில் நடிப்பது மிக சுலபமாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஏனெனில் ஒரு கதாபாத்திரத்துக்கான நடிப்பைச் சொல்லித் தரும் போது அவரும் அதுவாகவே மாறிப்போகிறார்.
"அவரது முகத்தில் தெரியும் பாவங்களை அப்படியே வெளிப்படுத்தினால் போதும். நல்ல நடிகை என்று ரசிகர்கள் ஆராதிப்பார்கள்," என்று சொல்லும் சுனைனா, தற்போது இணையத்தில் வெளியாகும் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் 'காளி' படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்தது மறக்க இயலாத அனுபவம் என்கிறார். "பெண் இயக்குநர் இயக்கத்தில் நடித்தது எப்படி இருந்தது என்று கேட்கிறார்கள். படைப்பாளிகளில் ஆண், பெண் எனும் பேதம் பார்க்கக் கூடாது என்பதே என் கருத்து," என்கிறார் சுனைனா.

