'கமல், ரஜினி செய்தது சரி'

'கமல், ரஜினி செய்தது சரி'

2 mins read
61a6ede6-5c9c-45ec-80fa-0a503a31d837
-

கமல், ரஜினியுடன் அரசியல் ரீதியில் இணைந்து செயல்படப் போவதில்லை என நடிகர் சிம்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் ரஜினியும் கமலும் தாம் தெரிவித்தது போன்று தடாலடியாக கருத்து தெரிவிக்க இயலாது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். "காவிரி விவகாரத்தில் அவர்கள் இருவரும் என்னைப் போல் ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்புவதே தவறு. இருவருமே தற்போது அரசியலுக்கு வந்துவிட்டனர்.

"எனவே என்னைப் போன்று கருத்து தெரிவிக்க இயலாது. ஒருவேளை என்னைப் போல் அவர்களும் பேசியிருந்தால் குறிப்பிட்ட தரப்பினர் அவர்களை தமிழினத்துக்கு எதிரானவர்கள் என்று சித்திரித்திருப்பார்கள். "இருவரது கருத்துகளையும் முன்வைத்து அரசியல் செய்திருப்பார்கள். எனவேதான் இருவரும் பொறுமை காப்பதாகக் கருதுகிறேன்," என்று சிம்பு தெரிவித்துள்ளார். கர்நாடகா மக்கள் குறித்த எண்ணத்தை மாற்றவே தாம் சில கருத்துக்களை வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழ் மக்களுக்காக பேச வேண்டியது தன் கடமை என்றும் கூறியுள்ளார்.

"தமிழர்களுக்காக ஒரு குவளை தண்ணீர் கொடுக்க வேண்டும் என கர்நாடக மாநில மக்களை நான் கேட்டுக் கொண்டதற்கு காரணம் உள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழர்களையும் தமிழ்நாட்டை யும் எதிர்த்தால்தான் கர்நாடகத் தேர்தலில் மக்களின் ஆதரவும் வாக்குகளும் கிடைக்கும் என்ற கூற்றை உடைத்தெறியவே அவ்வாறு வேண்டு கோள் விடுத்தேன். "கர்நாடகா மக்கள் தமிழகத்துக்கு காவிரி நீரை தர விரும்பவில்லை என்று சொல்லி, அதை நம்ப வைக்க முயற்சி நடைபெறுகிறது. எனவே உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என்பதற்காக எனது கருத்தை வெளியிட்டேன்," என்கிறார் சிம்பு.