ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் அண்மையில் வெளிவந்தது 'நாச்சியார்' படம். இந்தப் படத்தின் மூலம் அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. படத்தில் நடிப்பதுடன் இசையமைப்பாள ராகவும் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு, விவசாயம், ஹெட்ரோ கார்பன், மீத்தேன், நீட், ஸ்டெர்லைட், காவிரி எனப் பல விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.
'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனிதா என்ற மாணவி இறந்தபோது அவரது வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் 'நீட்' தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி வருகிறார் ஜி.வி. இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது "நீட்' எனும் அரக்கனால் தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்குச் சென்றபோது இனி ஓர் அனிதாவை 'நீட்'டால் பறி கொடுக்கக் கூடாது என முடிவெடுத்தேன். "என் நண்பர்களுடன் பேசி வல்லுநர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து 'நீட்' தொடர்பாக மூன்று மாதமாக வரைவுத் திட்டத்தைத் தயாரித்து தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் இலவசமாக பயன்பெறும் வகையில் தொலைபேசியில் செயலி ஒன்றை உருவாக்கி வருகிறோம்.
"தகுதியான மதிப்பெண்கள் இருந்தும் பணம் என்ற ஒரு காரணத்தால் எந்த மாணவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எங்களால் முடிந்த முயற்சி இது. இன்னும் சில மாதங்களில் இந்த செயலி உருவாக்கும் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும். செயலி உருவாக்க உதவும் எனது குழுவிற்கு வாழ்த்துகள்," என்று பதிவிட்டிருக்கிறார்.

