என்னைப்போல சிறுவயதில் நிறைய பேர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியிருக்கிறார். பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிஃபா வின் வழக்கு இந்தியாவைக் கதி கலங்க வைத்துள்ளது. இதற்கு பிரபல நடிகைகள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வரு கின்றனர். தற்போது தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ் காணொளி ஒன்றை வெளியிட்டி ருக்கிறார். அதில் நாட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பெண்களின் பாதுகாப்பு.
ஆண்களும் பெண்களும் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பார்கள். நானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன். 5 வயதில் நடந்த ஒன்றை நான் அம்மா, அப்பாவிடம் எப்படி சொல்லுவேன். எனக்கு அப்போது என்ன நடந்தது என்று கூடத் தெரியாது. "பாலியல் தொல்லைகள் கொடுப்பது எல்லாம் வெளியாட்கள் மூலம் நடப்பதில்லை. நமக்குத் தெரிந்த உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகத்தான் நடக்கின்றன. எனவே எல்லா பெற்றோர்களும் தயவுசெய்து பொறுப்புடன் இருங்கள்.
"உங்கள் குழந்தைகளுக்கு யார் எப்படி பேசினால் தப்பு? எப்படி தொட்டால் தப்பு? என்று 2 வயதில் இருந்தே சொல்லிக்கொடுங்கள். குழந்தைகளுக்குப் பள்ளியில், துணைப்பாட வகுப்புகளில் என்ன நடக்கின்றன என்று நமக்குத் தெரியாது. எனவே பாதுகாப்பு குறித்து அதிகம் சொல்லிக் கொடுங்கள்.
"நாம் அனைத்துக்கும் போலிசையே நம்பி இருக்க முடியாது. அந்தந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் குழுவாக இணைந்து உங்கள் தெருவில் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். தவறு நடந்தால் தட்டி கேளுங்கள். "தற்போது எனக்கு வெளியே சென்றாலே பயமாக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் சந்தேகத்துடன் பார்க்கத் தோன்றுகிறது. பாலியல் துன்புறுத்தல் மிகத் தவறானது. இதனை ஒழிக்க அனைவரும் பாடுபடவேண்டும்," என்று பேசியுள்ளார்.

