'காட்டேரி'யில் நடிக்கும் ஆத்மிகா

'காட்டேரி'யில் நடிக்கும் ஆத்மிகா

2 mins read
ce5cf9fb-d1da-407a-a173-ffc9fd1e67f3
-

'யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டி.கே. கைவண்ணத்தில் உருவாகும் புதிய படம் 'காட்டேரி'. இதில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். படத்தில் மொத்தம் நான்கு கதாநாயகிகளாம். 'மீசைய முறுக்கு' புகழ் ஆத்மிகா, சோனம் பாஜ்வா, தெலுங்கு நாயகி மனாலி ரத்தோட், வரலட்சுமி சரத்குமார் ஆகிய நால்வருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம். "நவீன வசதிகளைக் கொண்ட நகர்ப்புறத்தில் ஒரு பகுதி கதை நடக்கிறது. மற்றொரு பகுதி பல ஆண்டுகளுக்கு முன் நடக்கும் சம்பவங்களை உள்ளடக்கி இருக்கும். நகர்ப்புற பகுதியில் ஆத்மிகாவும், சோனம் பாஜ்வாவும் இடம்பெறுவர்.

"வரலட்சுமி மிக வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். சோனம் பாஜ்வா 'கப்பல்' படத்தில் நடித்தது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவரிடம், இப்படத்தின் கதையைச் சொன்ன போது மிகவும் ரசித்தார். உடனே கால்‌ஷீட்டும் ஒதுக்கித் தந்தார்," என்கிறார் இயக்குநர் டி.கே. 'காட்டேரி'யில் ஓவியாவும் ஹன்சிகாவும் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது அவர்கள் இருவரும் நடிக்கவில்லை என்பதுடன், நான்கு நாயகிகள் நடிப்பது உறுதியாகி உள்ளது.

"இது திகில் கதை தான். ஆனால் திகிலையும் கடந்த வேறு பல அம்சங்கள் ரசிகர்களை மகிழ்விக்கும். பாட்டி சொன்ன கதைகள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்படிப்பட்ட ஒரு கதையை ரசிகர்கள் திரையில் எதிர்பார்க்கலாம். "கற்பனையான அம்சங்கள் பலவும் இடம்பெற்றிருப்பதால் குழந்தைகளையும் இந்தப் படம் நிச்சயம் கவரும். "என்னுடைய கதாபாத்திரம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால் மிகுந்த ஈடுபாட்டுடன் நடிக்கிறேன்," என்கிறார் ஆத்மிகா.

தமிழில் நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் பிற மொழிப் படங்களைத் தவிர்த்துவிடுவாராம். தவிர, நல்ல கதைகள் அமைந்தால் சம்பளம் என்பது தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும் சொல்கிறார். "தமிழில் நல்ல படங்கள் தயாரா வது மகிழ்ச்சி தருகிறது. எனினும் எனக்கேற்ற கதாபாத்திரங்கள் இன்னும் தேடி வரவில்லை," என்கிறார் ஆத்மிகா. தமிழ்த் திரையுலகில் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்த கையோடு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. எனவே திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் படம் வெளியீடு காணும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.