அதா சர்மா: இது சவாலான காலக்கட்டம்

அதா சர்மா: இது சவாலான காலக்கட்டம்

3 mins read
b2b21941-0f52-4685-bc10-4ee1966fa733
-

'சார்லி சாப்ளின் 2' மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார் அதா சர்மா. பூர்வீகம் கேரளா என்றாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில். தமிழ் ரசிகர்களுக்கு அதா சர்மா ஏற்கெனவே அறிமுகமானவர்தான். 'இது நம்ம ஆளு' படத்தில் இடம்பெற்ற 'மாமன் வெயிட்டிங்' பாடலில் இவரது பங்களிப்பும் உண்டு. இந்தியில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு நிகராகப் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித் திருக்கிறார். இருந்தாலும், தமிழில் நடிக்க வேண்டும் என்பதில் முனைப்புடனும் ஆர்வமுடனும் உள்ளார். "தாய் மொழி மலையாளம் என்றாலும், வீட்டில் இந்தியில்தான் அதிகம் பேசுவோம். மும்பையில் பிறந்து வளர்ந்ததால், இயல்பாகவே இந்தி பழக்கமாகி விட்டது. அப்பா இந்தியக் கடற்படை கேப்டன். அம்மா நடனக் கலைஞர்.

"வீட்டுக்கு நான் ஒரே பெண். எனவே பொறுப்புடன் வளர்த்து ஆளாக்கப்பட்டுள் ளேன்," என்று சொல்லும் அதா சர்மாவுக்கு கடந்த ஆண்டு வாழ்க்கையில் சில சோதனைகள் குறுக்கிட்டனவாம். விபத்து ஒன்றில் இவரது தந்தை காலமாகிவிட்டார். எனவே, குடும்­பத்தைச் சரிவர பராமரித்துக்கொண்டே, சினிமாவிலும் நடிக்க சிரமப்பட்டுள்ளார். "இந்தக் காலக்கட்டம் மிகப்பெரிய சவாலா இருக்கிறது. எனினும் மன உறுதியுடன் அனைத்தையும் எதிர்கொண்டு வருகிறேன்," என்கிறார். தன் தாயின் வழியைப் பின்பற்றி நடனத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார் அதா. நடனத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளாராம். அது மட்டுமல்ல, கடந்த ஏழு ஆண்டுகளாக கர்நாடக சங்கீதமும் கற்று வந்துள்ளார்.

"இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளேன். 'சார்லி சாப்ளின் 2' படத்துக்குப் பாட்டு பாடத்தான் வந்தேன். ஆனால் இயக்குநர் சக்தி சிதம்பரம் என்னை நடிக்கவும் வைத்தார்.

"திடீர் என நடிப்பு, ஒப்பனைத் தேர்வுக்கு ஏற்பாடு செய்தவர், என்னைத் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் மளமளவென நடந்து முடிந்துவிட்டது. "இந்தப் படத்தில் பாடலும் பாடியிருக்கேன். நிக்கி கல்ராணியும் மற்றொரு நாயகியாக நடித்துள்ளார். நகைச்சுவையும் கவர்ச்சியும் கலந்துள்ள கதை இது." பிரபு, பிரபுதேவா, சக்தி சிதம்பரம், நிக்கி கல்ராணி கூட்டணி எப்படி இருக்கிறது? என்று கேட்டால் முதலில் பிரபு குறித்துதான் பதில் வருகிறது.

பிரபுவை தன் தந்தையைப் போல் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாகச் சொல்கிறார். அவரது குணநலன்கள் வெகுவாகக் கவர்ந்திருப்பதாக வும் கூறுகிறார். "பிரபு சார் எனக்கு அப்பா மாதிரி. படப்பிடிப்புத் தளத்தையே நம் வீடு மாதிரி உணர வைத்தது அவர்தான். அவர் யாரிடமும் கோபப்பட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. "சமையல் கலைஞர்கள் முதல் படத்தின் கதாநாயகன் வரை எல்லோரையும் சமமாக நடத்துவார். படப்பிடிப்பில் ஐநூறு பேருக்கு முன்பு நின்று நடிக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டபோது தயக்க மாக இருந்தது. "அப்போது, பிரபு சார்தான் என்னை சூழ்நிலைக்கு ஏற்ப தயார்ப்படுத்தி நடிக்க வைத்தார். அவர் இல்லை என்றால், இந்தப் படத்தில் நான் சரியாக நடித் திருப்பேனா என்று தெரிய வில்லை.

"சக்தி சிதம்பரம் சாரின் மனைவிதான் எனக்குத் தமிழ் உச்சரிப்பைச் சொல் லிக் கொடுத்தார். நிக்கி கல்ராணி எனக்கு நெருங்கிய தோழியாகி விட்டார். "தன்னம்பிக்கைக்கு அவர் தான் மிகச் சிறந்த உதாரணம். திறமையான கடின உழைப் பாளி. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்," என்று சொல்லும் அதாவுக்கு தனுஷ்தான் பிடித்தமான நாயகனாம். தனுஷ் படங்கள் வெளியானால், உடனே திரையரங்குக்குச் சென்று அதைப் பார்த்துவிடுவாராம். "அவரோடு சேர்ந்து ஒரு விளம்பரப் படத்திலும் நடித் துள்ளேன். தனுஷ் எனக்கு நல்ல நண்பர். இப்போது பிரபுதேவாவுடன் நடித்த பிறகு, அவரும் எனது நண் பராகிவிட்டார்," என்கிறார் அதா சர்மா.