சாக்‌ஷி: எதிர்மறை எண்ணங்கள் அகன்றன

சாக்‌ஷி: எதிர்மறை எண்ணங்கள் அகன்றன

2 mins read
eba3257b-786c-47e5-8e75-efe221cff06b
-

சாக்‌‌ஷி அகர்வாலை தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். `ராஜா ராணி' படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர். அதன் பிறகு சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தலைகாட்டிப் போயிருக்கிறார். தமிழில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் கோடம்பாக்கத்தை வலம் வந்துகொண்டிருந்தவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில், 'காலா' படத்தில் நடிக்கக் கேட்டு படக் குழுவினர் அணுகியபோது மறுப்பா சொல்வார்?

'காலா'வில் நடிப்பது வெளியே தெரிந்ததும், பல வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். அதனால் மனதிலும் முகத்திலும் பரவசம் தென்பட உற்சாக வலம் வருகிறார் சாக்‌ஷி. அம்மணி லேசுப்பட்ட ஆள் அல்ல. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். தங்கப் பதக்கம் பெறும் அளவுக்கு சிறந்த மாணவியாகத் திகழ்ந்துள்ளார். ஐஏஎஸ் ஆவதுதான் இவரது லட்சியமாம். அதற்காக கடுமையாக உழைத்தாராம். கூடவே எம்பிஏ பட்ட மேற்படிப்பையும் முடித்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் நடிப்பின் மீது ஆர்வம் திரும்பி இருக்கிறது.

"அமெரிக்காவில் உள்ள `லீ ஸ்ட்ராஸ்பார்க் தியேட்டர் அண்ட் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்'டில் நடிப்பு தொடர்பான பயிற்சியை மேற்கொண்டேன். தென்னிந்தியாவிலேயே இந்தப் பயிற்சியை முடித்துள்ள ஒரே நடிகை நான்தான். ஹாலிவுட் நடிகர்கள் பெரும்பாலும் இந்தப் பயிற்சி மையத்தில்தான் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். "உலகம் முழுவதும் என் முகம் பரிச்சயமானதாக இருக்க வேண்டும் என விரும்பினேன். அதற்கு சினிமாதான் சிறந்த பணிக்களம் என முடிவு செய்தேன். "இந்த எண்ணத்தோடு மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தபோது நல்ல வாய்ப்புகள் அமைந்தன. அப்போதுதான், `ராஜா ராணி' படத்துக்கு நடிகர், நடிகைகளின் தேர்வு நடப்பது குறித்து கேள்விப்பட்டேன்.