புளி கரைக்கும் சாயிஷா

புளி கரைக்கும் சாயிஷா

2 mins read
3930faca-1e4b-4021-9623-b9372d78684e
-

இளைஞர்களைக் கிறங்கடிக்கும் மின்னல் வேக நடன அசைவுகளைத் தனது தனிச்சிறப்புத் தன்மையாகக் கொண் டவர் 'வனமகன்' படத்தில் நடித்த சாயிஷா சைகல். இவரின் வரவு கோலிவுட்டில் முன்னணி நடிகைகளாக கோலோச்சிக் கொண்டிருக்கும் பல நாயகிகளின் வயிற்றிலும் புளியைக் கரைத்திருப்பது அப்பட்டமான உண்மை என்று கோடம்பாக்க வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. நாகார்ஜூனா-அமலா தம்பதியினரின் மகன் அகில் அறிமுகமான தெலுங்குப் படம்தான் சாயிஷாவுக்கு முதல் படம். அதன்பிறகு அஜய்தேவ்கனுடன் இந்தியில் '‌ஷிவாய்' என்று பயணித்து, ஏ.எல்.விஜய் இயக்கிய 'வனமகன்' மூலமாகத் தமிழுக்கு அறிமுகமானார்.

கார்த்தியோடு 'கடைக்குட்டி சிங்கம்', விஜய் சேதுபதியோடு 'ஜூங்கா', ஆர்யாவோடு 'கஜினி காந்த்' என்று சாயிஷா கைவசம் வைத்திருக்கும் படங்கள் எல்லாம் வெற்றிபெறும் படங்களின் வகையறாக்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது. "படப்பிடிப்புக்குப் போனால் நான் நடிக்க வேண்டிய பாத்திரத்தை பற்றித்தான் முழுமையாக நினைப்பேன். வசனம் என்ன, அதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் நானே வித்தியாசமாக பேசி, நடித்து ஒத்திகை பார்ப்பேன்.

"எவ்வளவு பெரிய வசனத்தையும் நானே பேசவேண்டும் என்று விரும்புவேன். என்கிட்ட தமிழில் பேசினால் புரிஞ்சுக்குவேன். ஆனால் பதிலுக்குத் தெளிவாகப் பேசமாட்டேன். காரணம், இப்பொழுதுதான் தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன். "முதல்முறையாக கார்த்திக் கூட நடித்தபோது அவர் நிறைய உதவிக் குறிப்புகளைக் கூறினார்.

"படப்பிடிப்பில் நான் பார்த்து ரொம்பவும் ஆச்சரியப்பட்ட நடிகர் விஜய் சேதுபதி. எந்த வசனமாக இருந்தாலும் அதைத் தனி பாணியில் பேசி அசத்துவார். படப் பிடிப்பின்போது ஆர்யா எல்லாரையும் கலாய்ப்பார். ஜாலியாக இருக்கும். "நான் நன்றாக நடிப்பதற்கும் பிரமாதமாக நடனமாடுவதற்கும் எந்த விஷயத்தையும் உடனே கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைக்கும் என் ஆர்வம்தான் காரணம் என்கிறார் சாயிஷா.