தன் தந்தையை வேதனைப் படுத்தும் வகையில் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்கிறார் அமைரா தஸ்தூர். 'அனேகன்' படத்தில் நடித்த இவர், தற்போது இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் இவர் நடித்த 'மிஸ்டர் எக்ஸ்' இந்தியில் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவு வரவேற்புப் பெறவில்லை என்பதில் அமைராவுக்கு ரொம்பவே வருத்தம். கடந்த சில தினங்களாக மன வேதனையில் வீட்டை விட்டு எங்குமே போகவில்லையாம்.
"நான் நடித்த 'இஷாக்' படம் ஓடவில்லை. என்றாலும், நல்ல நடிகை என்று பெயர் கிடைத்தது. எனவே படத்தின் தோல்வி குறித்து வருந்தவில்லை. ஆனால் 'மிஸ்டர் எக்ஸ்' படமும் ஓடவில்லை என்பதுதான் மிகுந்த வேதனையை அளித்துள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நடனப் பயிற்சி, உடற்பயிற்சி என எதற்கும் போகவில்லை. "நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். எனவே, என் தந்தையை வேதனைப்படுத்தும் விதத்தில் உடற் கவர்ச்சியைக் காட்டி நடிக்க விரும்பவில்லை," என்று அமைரா தெரிவித்துள்ளார்.

