"இன்றைய தலைமுறையினருக்கு நடிகை சாவித்திரியைப் பற்றித் தெரிந்திருந்தாலும் அவர் நடித்த படங்களைப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். இந்த இளம் தலைமுறையினருக்கு பழம்பெரும் நடிகை சாவித்திரியை கண்முன்னே கொண்டு வர இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். படத்தில் அவருடைய அனுபவத்தையும் அவர் சந்தித்த சவால்களையும் கூறும்போது, "சாவித்திரி மேடம் ஒரு சராசரி மனுஷி. அவர்களுக்கு நடந்ததுபோல் இன்றைக்கு யாருக்கும் நடக்காது என்று சொல்ல முடியாது. இந்த ஒரு விஷயமே ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு போதுமான செய்தி யாகும். ஒரு நடிகையாக சாவித்திரி தொட்ட உயரம், சம்பாதித்த சொத்து, பெயர், புகழ், கஷ்டப்பட்ட கடைசி காலம் எல்லாம் படத்தில் இருக்கிறது".
சாவித்திரி வேடத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் மற்றவர்களுக்கும் கொடுக்கப் பட்டு இருக்கிறதா? "நிச்சயமாக! பத்திரிகையாளராக சமந்தா, ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மான், சாவித்திரியின் சித்தப்பாவாக ராஜேந்திர பிரசாத் தவிர விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், திவ்யா வாணி, பானுப்பிரியா நடித்திருக்கின்றனர். மேலும் பல முன்னாள் நடிகைகளும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இந்தப் படம் நிறைவடையாது. மேலும் படத்தில் வரும் சின்ன வேடங்களில் பல இயக்குநர்களும் நடித்திருக்கிறார்கள்".

