'கண்ணுக்குள்ளே', 'ராமர்', 'சூரன்', 'திலகர்', 'ஒரு நாள் இரவில்' போன்ற படங்களில் நடித்திருப்பவர் அனுமோல். இவருக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களே தொடர்ச்சியாக வருகின்றன. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "நான் இதுவரை ஏற்று நடித்த வேடங்கள் என்னை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் எனது மனதுக்குப் பிடித்த வேடமாக இருக்க வேண்டும். பல நடிகைகள் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று பரிசோதனை முயற்சியில் இறங்குகிறார்கள்.
"ஒரே பாணியிலான கதாபாத்திரங்கள் அமைவது என்பது நடிகைகளின் கையில் இல்லை. அடிக்கடி ஏற்கும் கதாபாத்திரங்களை ஒரே பாணி கதாபாத்திரம் என்கின்றனர். அதற்கு நடிகைகள் மீது குறை சொல்லக்கூடாது.
'கண்ணுக்குள்ளே' படத்தில் ஏற்று நடித்த பாரதி கதாபாத்திரம் முதல் நான் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் சவாலானதாகவே அமைந்தன. இதில் ஒன்றிரண்டு பாத்திரங்களைப் பிரித்து இது மட்டுமே எனக்குப் பிடித்த கதாபாத்திரம் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் நான் நடித்த பல கதாபாத்திரங்களின் பெயர்களைக் கைத் தொலைபேசிகளில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர்.
இந்தக் கதாபாத்திரங்கள் அழுத்த மானவை என்பது பலருக்கும் தெரியும். அதுபோன்ற கதாபாத்திரத்துக்குத்தான் என்னைத் தேடி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை கனவு கதாபாத்திரம் என்று எதுவும் கிடையாது. கனவு காண்பதுபோல் வாழ்க்கை அமைவது கிடையாது. அதனால் கனவு காண்பதற்கு நான் பயப்படுகிறேன்," என்றார் அனுமோல்.

