முதியோர் இல்லங்களைத் தேடிச் செல்லும் 'மகாநதி'

முதியோர் இல்லங்களைத் தேடிச் செல்லும் 'மகாநதி'

1 mins read
4a4efe2d-5522-4eb4-914d-93623a072c9d
-

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக தெலுங்கில் 'மகாநதி' என்கிற படம் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. சாவித்திரியை, அவரது நினைவுகளை, அந்த வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மீட்டுக்கொண்டு வந்துவிட்டார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். முதியோர் இல்லங்களில் இருக்கும் வயதானவர்கள் பலரும் சாவித்திரியின் ரசிகைகளாக அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, அவர் நடித்த படங்களைப் பார்த்து ரசித்தவர்கள் தான். அதனால் அவர்களுக்கு இந்த 'மகாநதி' படத்தைச் சிறப்புக் காட்சியாக திரையிட்டுக் காட்ட படத் தயாரிப்பு நிறுவனம் முன் வந்துள்ளது. ஜூன் மாத இறுதியில் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கும் விதமாக அவர்கள் இருக்கும் இடங்களில் திரையிட்டுக் காட்டப்படும் என்று சொல்கிறது படக்குழு.

இந்தப் படத்தைச் சுமார் 25 கோடி ரூபாய் செலவில் தயாரித்து வெளியிட்டனர். நடிகை சாவித்திரி பல நல்ல தமிழ்ப் படங்களில் நடித்தவர் என்பதால் அந்தத் தெலுங்குப் படத்தைத் தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் மறுபதிப்பு செய்து வெளியிட்டனர். தமிழில் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் படத்தில் பல காட்சிகளில் தெலுங்கு வசனங்கள் இடம்பெற்றதாலும் பல தெலுங்கு நடிகர்கள் நடித்திருந்ததாலும் தமிழ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெறவில்லை. படத்தைத் தமிழில் தயாரித்து வெளியிட்டிருந்தால் நல்ல வசூலைக் குவித்திருக்கும். தெலுங்கில் இப்படம் எதிர் பார்த்ததற்கும் மேலாக நல்ல வசூலைப் பெற்று வருகிறதாம்.