முப்பது ஆண்டுத் திரை வாழ்க்கையில் 90க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் பிரியதர்ஷனின் வீட்டு அலமாரிகளை எல்லாம் அவருக்குக் கிடைத்த விருதுகள் நிறைத்துக் கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் கொடுக்காத மகிழ்ச்சியை, மகள் கல்யாணியின் வெற்றி அவருக்குக் கொடுத்திருக்கிறது.
கல்யாணி அறிமுகமான முதல் படத்திலே விருது பெற்றிருக்கிறார். தெலுங்குப் படத்தில் நடித்த அவருக்குச் சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருது கிடைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை மகள், பிரியதர்ஷனிடம் சொல்ல, அந்த இன்ப அதிர்ச்சி அன்று இரவு முழுவதும் அவரை தூங்க விடாமல் செய்திருக்கிறது. பிரியதர்ஷன்= நடிகை லிசியின் மகளான கல்யாணி அமெரிக்காவில் ஆர்க்கிடெக்சர் துறையில் பட்டம் பெற்றவர். பின்பு பிரபல சினிமா ஆர்ட் இயக்குநர் சாபுசிரிலிடம் இணைந்து பணியாற்றினார். கிருஷ்=3 என்ற இந்தி படத்தில் அவர் கலை வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன.
திடீரென்று ஒரு நாள் அவர் தந்தையிடம், தான் நடிக்கப்போவதாக கூறியதை அவரால் நம்ப முடியவில்லை. அதுவரை நடிப்புப் பற்றி வாய்திறக்காத கல்யாணி அவ்வாறு கூறியதும், 'எதற்கும் நன்றாக யோசித்து முடிவெடு' என்று தாயும், தந்தையும் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் அந்த வேகத் திலே கல்யாணி கதாநாயகி யாகி விட்டார். நாகார்ஜூனா தயாரித்து அவரது மகன் அகில் அக்கினேனி கதா நாயகனாக நடித்த 'ஹலோ' என்ற தெலுங்கு படத்தில் அரங்கேறிவிட்டார். முதல் படமே அவருக்குச் சிறந்த அறிமுக நாயகிக்கான விருதினைப் பெற்றுக் கொடுத்துவிட்டது. அந்த விருதினை அம்மா லிசியின் கையாலே பெற்றிருக்கிறார்.

