இளையராஜா இசையில் நடித்ததில் பெருமை

2 mins read
d11dbd83-97a4-4413-9e52-e0fb02b0c211
-

எனது தாத்தா, அப்பா படங்களுக்கு இசையமைத்த இளையராஜா இப் போது எனது படத்துக்கும் இசை அமைத்து இருப்பது பெருமையாக இருக்கிறது என்று நடிகர் விக்ரம் பிரபு கூறியுள்ளார். விக்ரம் பிரபு நடித்துள்ள புதிய படத்துக்கு '60 வயது மாநிறம்' என்று பெயரிட்டுள்ளனர். இதில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத் திரத்தில் நடித்து வருகிறார்கள். வி.கிரியே‌ஷன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இளைய ராஜா இசையமைத்துள்ளார்.

படம் பற்றி விக்ரம் பிரபு கூறும் போது, "மொழி படத்தை அனுபவித்துப் பார்த்து அந்தப் படத்தை இயக்கிய ராதாமோகனைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்தேன். இப்போது அவர் இயக்கத்திலேயே நடித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது படத்துக்கு இளையராஜா இசை அமைத்து இருப்பதை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. வளரும் நடிகரான நான், திறமையான இயக்குநர்கள் அனைவருடைய படங் களிலும் நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஜாலியாகப் படப் பிடிப்பு நடந்து முடிந்துள்ளது," என்றார்.

இயக்குநர் ராதாமோகன் கூறும் போது, ''கன்னடப் படத்தின் கருவை மட்டும் எடுத்துப் புதிய திரைக் கதையில் இந்தப் படத்தை உருவாக்கி உள்ளோம். தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவைச் சித்திரிக்கும் படமாக தயாராகி உள்ளது. இளையராஜா ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்," என்றார். தயாரிப்பாளர் எஸ்.தாணு, "எங் கள் தயாரிப்பில் வந்த கிழக்குச் சீமையிலே படம்போல் இந்தப் படமும் சிறந்த படமாக அமை யும்," என்றார்.