பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி கொலை வழக்கு, படமாக உருவாக இருக்கிறது. அதில் அஞ்சலி, ராய் லட்சுமி இருவரும் நடிக்கின்றனர். நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வாரின் மகளான ஆருஷி கடந்த 2008ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி அவருடைய படுக்கை அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரைக் கொலை செய்தது யாராக இருக்கும் எனப் பலரின் மீது சந்தேகிக்கப்பட்டு இறுதியில் அவரது பெற்றோர் மீதே சந்தேகம் திரும்பியது.
இந்தியாவையே பரபரப்பாக்கிய இந்தக் கொலை வழக்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. இறுதியில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் ஆருஷியின் பெற்றோர் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் சினிமாவாகிறது. அஞ்சலி, ராய் லட்சுமி இருவரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
நடிகை அஞ்சலி 'பலூன்' படத்தை அடுத்து தற்போது ஒரு படத்தில் பேயாக நடிக்கவுள்ளார். கதாநாயகிகளில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை அஞ்சலி. பல படங்களில் இவரின் துறுதுறு நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான படம் 'காளி'. இந்தப் படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் 'மதுர வீரன்' படத்தைத் தயாரித்து இயக்கிய பி ஜி முத்தையா தயாரிப்பில் ஒரு பேய்ப் பட சுவரொட்டி வெளியானது. அதில் ஒரு பெண்ணை தெளிவாகக் காட்டாமல் 'யார் இந்த லிசா' என்ற தலைப்பில் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கேள்வியை எழுப்பினர்.

