முன்னணி நடிகர்கள் வியக்கும் வண்ணம் கதைகளைத் தேர்ந்தெடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார் நயன்தாரா. ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் வெளிவரும்போது, அன்று அதிகாலை ரசிகர்களுக்குச் சிறப்புக் காட்சிகள் திரையிடுவார்கள். சென்னையைப் பொறுத்தவரையில் நான்கைந்து திரையரங்குகளில் இந்தச் சிறப்புக் காட்சிகள் இருக்கும். ஆனால் அதனை முறியடித்துச் சாதனை படைத்திருக்கிறார் நயன்தாரா.
இவருடைய நடிப்பில் வெளிவந்த 'கோலமாவு கோகிலா' படம் தமிழ்நாடு முழுவதும் 50 திரையரங்குகளில் அதிகாலை சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. தமிழ்த் திரை வரலாற்றில் ஒரு நாயகிக்காக இத்தனை சிறப்புக் காட்சிகள், இவ்வளவு பெரிய சிறப்புக் கிடைத்திருப்பது நயன்தாராவுக்கு மட்டுமே. இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 402 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இவருடைய நடிப்பில் இந்த மாத இறுதியில் 'இமைக்கா நொடிகள்' படம் வெளியாக உள்ளது.
தற்போது நயன்தாரா தமிழில் 'விஸ்வாசம்', 'கொலையுதிர் காலம்', சிவகார்த்திகேயன் படம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் மலையாளத்திலும் தலா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்பொழுது நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். 'கோலமாவு கோகிலா' படம் வெற்றியடைந்துவிட்டால் அவர் தன்னுடைய சம்பளத்தை ரூ.6 கோடிக்கு உயர்த்திவிடுவார் என்று கூறப்படுகிறது. இந்தத் தொகையைக் கொடுத்து அவரை நடிக்க வைக்கவும் சில தயாரிப்பாளர்கள் தயாராக காத்திருக்கிறார்கள்.

