'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவின் நடிப்பு அபாரமாக இருந்ததாகப் பாராட்டியுள்ளார் இளம் நாயகி மஞ்சிமா மோகன். இப்படி ஓர் அருமையான வெற்றிப்படத்தைத் தந்துள்ள இயக்குநர் நெல்சனையும் அவர் பாராட்டியுள்ளார். "படம் முழுவதும் நான் சிரித்துக்கொண்டே இருந்தேன். சில இடங்களில் அழ நேர்ந்தது. சில காட்சிகள் என்னை சிலிர்க்க வைத்தன. இதுபோன்ற மேலும் பல படங்களை இயக்குநர் நெல்சன் தருவார் என நம்புகிறேன்.
"அனிருத்தின் இசை அபாரம். இதுபோன்ற தரமான கதைகளை ஊக்குவிக்கும் லைகா நிறுவனத்துக்கு நன்றி. இறுதியாக இப்படத்தின் வெற்றிக்கு வித்திட்ட நயன்தாராவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். "அனைத்துப் பெண்களுக்கும் ஓர் உந்துசக்தியாக, உத்வேகத்தை அளிக்கக்கூடிய நபராக நீங்கள் விளங்குகிறீர்கள். இது அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு படம்," என்று பாராட்டி உள்ளார் மஞ்சிமா மோகன். தற்போது விக்ரம் பிரபுவுடன் 'சத்தியன்' படத்தில் நடித்து வருபவர், 'இப்படை வெல்லும்' படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தியில் வெற்றிபெற்ற 'குயின்' படத்தின் மலையாள மறுபதிப்பிலும் மஞ்சிமாதான் நாயகி. 'தேவராட்டம்' படத்தில் கௌதம் கார்த்திக்கின் இணையாகவும் நடித்து வருகிறார்.

