விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக 'ராட்சசன்' என்ற படத்தில் நடித்திருக்கும் அமலாபால் தனக்கு கிடைத்த முதல் நல்ல நண்பர் விஷ்ணு என்றும் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கூறியிருக்கிறார். அண்மையில் அவர் கொடுத்த பேட்டியில், "இயக்குநர் 'ராட்சசன்' கதையைச் சொன்னபோது குழப்பமாக இருந்தது. விஷ்ணு விஷால் போனில் தொடர்புகொண்டு கதையை விளக்கிச் சொன்னார். வித்தியாசமான கதையாக இருந்தது. பிடித்துப்போனது. எனது கதாபாத்திரமும் அழுத்தமாக இருந்தது. படமும் சிறப்பாக வந்துள்ளது. இந்தப் படத்தை ராம்குமார் இயக்குகிறார். ஜி.டெல்லிபாபு தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். அக்டோபர் 5ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
"இந்தப் படம் மூலம் திரைத்துறையில் விஷ்ணு விஷால் எனக்குக் கிடைத்த முதல் நல்ல நண்பர் என்று கூறுவேன். நடிக்கும் கனவோடு வருபவர்களுக்கு விரக்தி ஏற்பட்டால் விஷ்ணு விஷாலை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். தனது கதாபாத்திரம் சிறப்பாக அமைய நூறு விழுக்காடு உழைப்பைக் கொடுப்பார். இது அவருக்குத் திருப்புமுனைப் படமாக இருக்கும். திகில் படங்களுக்கு ரசிகர்கள் உண்டு. 'ராட்சசன்' நமது மண்சார்ந்த திகில் படமாக இருக்கும். ஜிப்ரான் இசை படத்துக்குப் பெரிய பலம். இந்தப் படத்தில் சொந்த குரலில் பேசி இருக்கிறேன்.
வேறு ஒருவரை எனக்காகப் பேசவைப்பது குழந்தையைப் பெற்று மற்றவரிடம் கொடுப்பது போன்றது. அதனால் நானே என் படங்களுக்குப் பேசுவேன் என்று ஒப்பந்தம் போடும்போதே சொல்லிவிடுவேன். "எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட விருப்பம் இருக்கிறது. இமயமலைக்கு அடிக்கடி செல்கிறேன். அங்குள்ள இயற்கையான சூழலில் மனம் இதமாகிறது. ஆன்மீக உணர்வு ஏற்படுகிறது. எனது வாழ்க்கையை மாற்றியது இமயமலைதான். அங்கு செல்வது கடவுளிடம் செல்வதுபோல் இருக்கும். 'ஆடை' படத்தில் கதைக்குத் தேவையாக இருந்ததால் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன்," என்றார் அமலாபால்.

