விஷால், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் 'சண்டகோழி 2'. லிங்குசாமி இயக்குகிறார். யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இதில் நடித்தது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, "இந்தப் படம் மூலம் எனக்கு நல்ல நண்பராக விஷால் கிடைத்திருக்கிறார். 'சாவித்ரி' வாழ்க்கை சரித்திர படத்தில் நடித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில்தான் இந்தப் படத்திலும் நடித்தேன். 'சாவித்ரி' படத்தில் சோகம், ஆக்ரோஷம் என்று பலவிதமான காட்சிகளில் நடித்து மன இறுக்கத்துடன் இருப்பேன்.
"இதற்கிடையில் 'சண்டகோழி 2'ஆம் பாகம் படப்பிடிப்புக்கு வரும்போது மிகவும் கலகலப்பான சூழல் நிலவும். விஷால், லிங்குசாமி இருவரும் படக்குழுவை உற்சாகப்படுத்தி படப்பிடிப்பு நடத்துவார்கள். அதனால் 'சாவித்ரி' படத்தில் நடித்தபோது ஏற்பட்ட மன உளைச்சல் இதில் குறைந்து என்னை நான் ஆசுவாசப்படுத்திக்கொள்வேன். எப்போது இந்தப் படப்பிடிப்புக்குச் செல்வோம் என்று காத்திருப்பேன்," என்று கூறினார்.
இந்நிலையில் சீன நடிகர் ஒருவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பிரியதர்ஷனின் கனவுப்படம் 'அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. 16ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சாலி மரிக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். பிரிட்டிஷ்காரர்களைத் தீவிரமாக எதிர்த்தவர் இவர். குஞ்சாலி மரிக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். அவருடைய இளம் வயது கதாபாத்திரத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். 'சிறைச்சாலை' படத்திற்குப் பிறகு 22 ஆண்டுகள் கழித்து மோகன்லால் = பிரபு இருவரும் இந்தப் படத்தின் மூலம் இணைகின்றனர்.

