இப்போதெல்லாம் சினிமாவில் நடித்துக்கொண்டே இணையத் தளங்களில் வெளியிடப்படும் தொடர்களிலும் நடிக்க முன்வருகிறார்கள் முன்னணிக் கலைஞர்கள். அந்த வகையில் தீபா மேத்தா இயக்கும் புதிய இணையத் தொடரில் சித்தார்த் நடிக்க உள்ளார். இதில் அவரது ஜோடியாக நடிக்கிறார் ஹூமா குரேஷி. தீபா மேத்தாவைப் பற்றி தனியே சொல்லத் தேவையில்லை. மிக வித்தியாசமான கதைக் களத்துடன் தனது படைப்புகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்.
இவரது இயக்கத்தில் ஏற்கெனவே 'மிட் நைட்ஸ் சில்ட்ரன்' படத்தில் நடித்துள்ளார் சித்தார்த். இந்நிலையில் அவர் இயக்க உள்ள புதிய இணையத் தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷியை ஒப்பந்தம் செய்ய உள்ளனர். 'காலா' மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் ஹூமா. இவர் தற்போது இந்தி, தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சித்தார்த்தும் மூன்று தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்துகிறார்.

