சமூக வலைத்தளங்களில் தனது பெயரில் போலியாக கணக்குகள் துவங்கி சிலர் ரசிகர்களை ஏமாற்றி வருவதாக இளம் நாயகி பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். இத்தகைய கணக்குகளை ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் சேர்த் துக்கொள்ள வேண்டாம் என அவர் அறிவுறுத்தி உள்ளார். 'மேயாத மான்' படத்தில் அறிமுகமான பிரியாவுக்கு தற்போது நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். இந்நிலையில் தனது பெயரில் சமூக வலைத்தளங்களில் பல கணக்குகள் துவங்கப்படுவது கவலை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
"சினிமாவுக்கு வரும் முன்பே எனக்கு நிறைய ரசிகர்கள் இருந்தனர். சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் என்னைப் பின் தொடர்கின்றனர். ஆனால் அதற்குப் பிறகு போலியான கணக்குகளும் அதிகரித்துவிட்டன. எனவே எனது உண்மையான சமூக வலைத்தளப் பக்கங்கள் எவை என்பதைத் தெரிந்துகொண்டு ரசிகர்கள் என்னைப் பின்தொடர வேண்டும்," என அண்மைய காணொளிப் பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

