மலையாளத் திரை மூலம் 2004இல் தனது நடிப்புப் பயணத்தைத் துவங்கிய பூர்ணா 2008இல் தமிழில் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து கதையின் நாயகியாக அல்லது வில்லியாக என்று முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்குப் பின் சினிமாவுக்குள் வந்த பல நடிகைகள் திருமணம், குடும்ப வாழ்க்கை என செட்டிலாகிவிட்டனர். ஆனால் பூர்ணா தனது திருமண விஷயம் குறித்து இதுவரை பேசியதில்லை. அண்மையில் மலையாளத் தொலைக்காட்சி ஒன்றில் தனது திருமணம் தாமதமாவதற்குத் தடையாக இருப்பது எது என்கிற விவரம் குறித்துக் கூறியுள்ளார்.
"என் அம்மா எனது திருமணப் பேச்சை எடுக்காத நாளில்லை. ஆனால் திருமணத்திற்கு எனது மதம் மிகப்பெரிய தடையாக இருக்கிறது. அதையும் மீறி சம்பந்தம் பேச வருபவர்களும் திருமணத்திற்குப்பின் நான் நடிப்பு, நடனம் ஆகியவற்றை விட்டுவிட வேண்டும் என்கின்றனர். எனக்கு நடிப்பும் நடனமும் இரண்டு கண்கள் போன்றவை. கண்களை இழந்து நான் திருமணம் செய்துகொண்டால் என்னால் நிம்மதியாக வாழ முடியாது. அதனாலேயே எனது திருமணம் தள்ளிப்போகிறது. "அதேசமயம் ஜாதியைப் பெரிதாக நினைக்காமல் நிபந்தனை இல்லாமல் வரும் வரனைத் திருமணம் செய்துகொள்வதில் எனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை," என்றும் கூறியுள்ளார் பூர்ணா.

